டெல்லி: டெல்லி முன்னாள் துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக டெல்லியில் உள்ள பள்ளிகளில் ‘ஐ லவ் மணீஷ் சிசோடியா’ பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளத்துள்ள டெல்லி ஆம்ஆத்மி அரசு, இது அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்வு அல்ல,  “எந்தவொரு அரசாங்கத் துறை அல்லது அரசு ஊழியர் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை” இது பாஜகவின் வேலை என மறுப்பு தெரிவித்து உள்ளது.

சிறையில் உள்ள ஆம் ஆத்மி தலைவருக்கு ஆதரவாக டெல்லி அரசு அரசுப் பள்ளிகளில் ‘ஐ லவ் மணீஷ் சிசோடியா’  பிரசாரம் செய்யப்பட்டு வருவதாகவும், இதற்கு பின்னணியில் ஆம்ஆத்மி அரச இருப்பதாகவும், பாஜக குற்றம் சாட்டி உள்ளது.

டெல்லி ஆம்ஆத்மி அரசின் துணைமுதல்வராக இருந்த மனிஷ் சிசோடியா, கல்வி உட்பட 18 இலாகாக்களை தன் வசம் வைத்திருந்தார். டெல்லி பள்ளிகளில் பல்வேறு புதுமையான திட்டங்களை கொண்டு பெரும் வரவேற்பை பெற்றார். இருந்தாலும், அவர் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு செய்தாக குற்றம் சாட்டப்பட்டு,  வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது கைது நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில்,  ஆம்ஆத்மி கட்சி,  மணீஷ் சிசோடியாவுக்கு ஆதரவு திரட்டும் விதமாக டெல்லி அரசுப் பள்ளிகளில் ‘ஐ லவ் மணீஷ் சிசோடியா’ என்ற பெயரில் பிரசார இயக்கத்தை உருவாக்கி வருவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளி ஒன்றில், இதுபோன்ற பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லி அரசு கல்வி என்ற பெயரில் தனது மோசமான அரசியலை நிறுத்தாமல், பள்ளிக் குழந்தைகளை அதில் ஈடுபடுத்தும் அளவிற்கு சென்றுள்ளதாக பாஜகவும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆனால், இந்த இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற செயல்களில் எந்த ஒரு அரசு துறையும், அரசு ஊழியர்க்கும் ஈடுபடவில்லை என விளக்கம் அளித்துள்ளது.