மும்பை: இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் கால்பந்து தொடர்களில் ஒன்றான ஐ-லீக் கால்பந்து தொடரில், புள்ளிகள் அடிப்படையில் மோகன் பகான் அணி சாம்பியன் பட்டம் வெல்வது கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தக் கால்பந்து தொடரில் சென்னை சிட்டி, ஈஸ்ட் பெங்கால் உள்ளிட்ட மொத்தம் 11 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் தலா 20 போட்டிகளில் விளையாடுவதுதான் இத்தொடரின் விதிமுறை.
அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி என்றில்லாமல், ஒட்டுமொத்த லீக் போட்டிகளில், அதிகப் புள்ளிகள் பெறும் அணிதான் சாம்பியனாக அறிவிக்கப்படுகிறது.
அதனடிப்படையில், இதுவரை தான் மோதிய 16 போட்டிகளில் அடிப்படையில், 12 வெற்றிகள், 3 டிரா மற்றும் 1 தோல்வி என்ற கணக்கில், மொத்தமாக 39 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது மோகன் பகான் அணி.
வேறு எந்த அணியும், இறுதிவரை ஆடினாலும், இந்தளவிற்கு புள்ளிகளைப் பெற முடியாது என்பதால், சாம்பியன் கோப்பை மோகன் பகான் அணிக்கே செல்லும் என்று கூறப்படுகிறது.