‘வேலூர் மக்களுக்கு எனது மகனை தத்துக்கொடுத்துவிட்டேன்…!’ துரைமுருகன்

Must read

வேலூர்:

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக திமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் மகன், கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அதைத்தொடர்ந்து இன்று வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி யில், தி.மு.க வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய துரைமுருகன், தனது மகன் கதிர் ஆனந்தை தொகுதி மக்களிடம்  அறிமுகப்படுத்தினார்.

அப்போது, ‘‘என் மகன் கதிர் அமெரிக்காவில் படித்தவர். அங்கு அவருக்கு ஒரு லட்சம் டாலர் சம்பளம் தருவதாகக் கூறினார்கள். ஆனால், அவர் அதையெல்லாம் வேண்டாமென்று கூறிவிட்டு தமிழக அரசியலுக்கு  வந்துவிட்டார் என்று கூறியவர், தனது மகன் கதிர்  அரசியலுக்குப் புதியவரல்ல. கலைஞர் தூக்கி வளர்த்த பிள்ளை அவர் என்று கூறினார்.

இந்த தொகுதியில் உள்ள மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியவர்,  என்னைப் பார்த்து, எனது மகனுக்கு  ஓட்டு போடுங்கள் என்று கூறினார். கதிர் ஆனந்த் வெற்றி பெற்றால், வாணியம்பாடி, குடியாத்தம் பகுதியில் தொழிற்பேட்டை அமைத்துக்கொடுக்கிறோம் என்றும் கூறியவர், என் மகனை இந்த  தொகுதி மக்களுக்கு தத்துக் கொடுக்கிறேன். இனி அவர், உங்கள் வீட்டுப் பிள்ளை’’ என்று உருக்கமாகப் பேசினார்.

துரைமுருகனின் டச்சிங்கான பேச்சு அங்கு கூடியிருந்தோரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

More articles

Latest article