டெல்லி:அரசுமுறை பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது மனைவி துர்காவுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தியையும், அவரது மகன் ராகுல்காந்தியையும் சந்தித்து பேசினார். இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள ராகுல், தமிழக முதல்வரை சந்தித்ததில் மகிழ்ச்சி, திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்து உள்ளார்.

2 பயணமாக டெல்லி சென்ற ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பிரதமர் நரேந்திர மோடியிடம், மு.க.ஸ்டாலின் வழங்கி பேசினார். நரேந்திர மோடி- மு.க.ஸ்டாலின் இடையேயான சந்திப்பு ஏறத்தாழ 30 நிமிடங்கள் நடைபெற்றது.

இதையடுத்து 2வது நாளான இன்று காலை  டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து அரசியல் ரீதியாக ஆலோசனை நடத்தினார்.

‘இந்த சந்திப்பு குறித்து டிவிட் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நானும் தமிழக முதல்வர் ஸ்ரீ எம். கே. ஸ்டாலின் மற்றும் திருமதி. துர்காவதியை சந்தித்தோம். தமிழக முதல்வரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. தமிழ் மக்களுக்கு ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டியெழுப்ப திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.