மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதி தொடர் கேள்விகளை எழுப்பியதுடன், கோகுல்ராஜூடன் சுவாதி செல்லும் விடியோவை காட்டியும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சுவாதி, வீடியோவில் வருவது நான் தானா என ஞாபகம் இல்லை என கூறினார். இதனால் கோபமடைந்த நீதிபதிகள், சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரித்தனர்.

சேலம்  ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறி, கடந்த 2015-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பான விசாரணையின்போது, நீதித்துறையின் மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில் சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்த னர். இது கட்டாயத் தேவை எனவும், தவறும்பட்சத்தில் நீதித்துறையின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும் என தோன்றுவதாகவும் குறிப்பிட்டனர். மேலும், கீழமை நீதிமன்றம் இதை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளாமல் சுவாதியின் சாட்சியை நிராகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மேல்முறையீட்டு நீதிமன்றம், துறவிகளைப் போல தவறுக்கு எதிராக சமநிலையை பேண இயலாது எனவும் தெரிவித்தனர்.

எனவே, கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி, நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராக உத்தரவிட்டனர். மேலும், சுவாதிக்கும் அவரது குடும்பத்தின ருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து இன்றைய விசாரணைக்கு சுவாதி அழைத்து வரப்பட்டார். அவரிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். கோகுல்ராஜுடன் அவர் நடந்து செல்லும் வீடியோவை ஓடவிட்டு அவரிடம் பல கேள்வி எழுப்பப்பட்டது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியான சுவாதி, நீதிமன்றத்தில் ஆஜரானார். விசாரணையில் சிசிடிவி காட்சிகள் காட்டி கேட்கப்பட்ட கேள்விக்கு அதில் கோகுல்ராஜுடன் செல்வதுதான் இல்லை என தெரிவித்தார்.

இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.   விசாரணைக்கு ஆஜரான சுவாதியிடம், கோர்ட்டு விசாரணை கூண்டில்  புத்தகம் மற்றும் குழந்தைகள் மீதும் சுவாதியிடம் சத்தியம் வாங்கப்பட்டது. அதன்பின் விசாரணை தொடங்கியது. விசாரணையின் இடையே   வழக்கு தொடர்பான வீடியோவை மீண்டும் மீண்டும் போட்டுக்காட்டி நீதிபதிகள் வீடியோவில் வருவது நீங்கள்தானே என கேள்வி எழுப்பினர்.

நீதிபதி: வீடியோவில் வரும் பெண்  யார் என தெரிகிறதா?

சுவாதி: முகம் சரியாக தெரியவில்லை.

 நீதிபதி: உங்களையே உங்களுக்கு தெரியவில்லையா என மீண்டும் கேள்வி எழுப்பினர்.

சுவாதி: வீடியோவில் வருவது நான் தானா என ஞாபகம் இல்லை  என மீண்டும் மறுத்தார்.

நீதிபதி: கோகுல் ராஜ் கொலை வழக்கில், நடந்த உண்மையை நீங்கள் கூறினால் நல்லது. இல்லை என்றால், நான் கேள்வி கேட்டு கொண்டே இருப்பேன் என்றார்.

சுவாதி அமையாக நின்றார்.

மீண்டும் நீதிபதி:  நீங்கள் சத்தியபிரமாணம் எடுத்துக்கொண்டு ஏன் பொய் சொல்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

தனக்கு தெரிந்ததையே கூறியதாக, யுவராஜ் யாரென்றே எனக்கு தெரியாது; வழக்கு தொடங்கிய பிறகே அவரை தெரியும் என சுவாதி கண்ணீருடன் மறுத்தார்.

இதனால் கோபமடைந்த நீதிபதிகள், உங்கள் புகைப்படத்தையே உங்களுக்கு தெரியவில்லை என கூறுவதெல்லாம் ஏற்புடையதல்ல என்று கூறியதுடன்,  வாழ்க்கையில் முக்கியம் சத்தியமும், நியாயமும், தர்மமும்தான்; சாதி முக்கியமல்ல என கடிந்துகொண்டதுடன், கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சி சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார்.