மான்செஸ்டர்: ஜஸ்ப்ரிட் பும்ராவின் டெத் ஓவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற கவலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்த இரவில் சரியாக தூங்கவில்லை என்று கூறியுள்ளார் நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர்.

அவர் கூறியதாவது, “முதல்நாள் ஆட்டத்தை மறுநாள் தொடர்வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் உணர்வை ஏற்படுத்தியது. வில்லியம்ஸன் ஆட்டமிழந்த நிலையில், ஒரு சவாலான எண்ணிக்கையை எட்ட வேண்டிய பொறுப்பு என்னிடம் வந்து சேர்ந்தது.

எப்படியும் 240 ரன்களை எடுத்துவிட்டால், அது சவாலான இலக்காக இருக்கும் என்று வில்லியம்ஸன் என்னிடம் வற்புறுத்தியிருந்தார். மேலும், இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களை எளிதல் வீழ்த்திவிட்டால் ஆட்டத்தை நம் பக்கம் கொண்டுவந்து விடலாம் என்றும் திட்டமிட்டோம்.

ஆனால், அருமையான டெத் ஓவர்களை வீசுவதில் உலகிலேயே சிறந்த பந்துவீச்சாளரான பும்ராவை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற கேள்விக்கு என்னிடம் விடை இருக்கவில்லை.

அதிகாலை 3 மணிக்கே எழுந்து அதுபற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டேன். ஆனாலும், நாங்கள் நினைத்ததை சாதிக்க முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகிறோம்” என்றார்.