சென்னை,

னது பிறந்தநாளை முன்னிட்டு, ஆவடியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசிய நடிகர் கமல்ஹாசன், தான் அரசியலுக்கு வருவது  நற்பணிகள் செய்யவே என்று கூறி உள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருவதால், தனது பிறந்த நாளை  கொண்டாட வேண்டாம் என அறிவித்துள்ள கமலஹாசன், தனது 63 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆவடியில் அவரது நற்பணி இயக்கத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட  மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய கமலஹாசன்,

மழை நேரங்களில் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில் இந்த மருத்துவ முகாம் தொடங்கப்பட்டு ஒள்ளதாக தெரிவித்தார்.  மருத்துவ முகாம்கள் நடத்தி அனுபவப்பட்ட பல மருத்துவர்கள் இங்கு முகாமை நடத்துகிறார்கள் என்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நற்பணி இயக்கத்தின் சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், தனது நற்பணி இயக்கம் சார்பில்,  இதுவரை 130 இலவச இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், 580 மருத்துவ முகாம்கள் நற்பணி இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டுள்ளதாக கமல் தெரிவித்தார்.

மேலும், தான் அரசியலுக்கு வர காரணம்,  பொதுமக்களுக்கு நன்மை செய்யவும், நற்பணிகள் செய்யவுமே  என்று குறிப்பிட்டார்.

இன்றைய  விழாவில் கமலுடன் அவரது  இளைய மகள் அக்ஷரா மற்றும் நற்பணி இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.