டில்லி :

நான் உச்சநீதி மன்றத்தில்தான் மன்னிப்பு கேட்டேன், மோடியிடம் அல்ல என்றும்,  ‘சவுடிகார் ஷோர் ஹாய்’ கோஷம்  தொடரும், அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தெளிவு படுத்தினார். மேலும், நாட்டின் முப்படைகள் பிரதமர் மோடியின் தனிப்பட்ட சொத்து அல்ல என்றும் கடுமை யாக விமர்சித்தார்.

இன்று தலைநகர் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மோடி மீதும், பாஜக ஆட்சி மீதும் கடுமையாக குற்றம் சாட்டினார்.

நாட்டின் தற்போதைய தலையாய பிரச்சினை வேலைவாய்ப்பு என்று தெரிவித்தவர், மோடி இதுவரை அது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

நாட்டின் பொருளாதாரத்தை  கேலிக்கூத்தாக்கிய மோடி, நாட்டின் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் தருகிறேன் என்று கூறினார்.  ஆனால், அது என்னவாயிற்று என்று மக்கள்  மோடியிடம் கேட்கிறார்கள் என்று தெரிவித்தவர்,  வேலைவாய்ப்பு பற்றியோ விவசாயிகள் பற்றியோ ஒரு வார்த்தை கூட மோடி பேசுவதும் இல்லை சொல்வதும் இல்லை என்று கூறினார்.

நாட்டின் முப்படைகளான  ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை மோடி நினைப்பது போல் அவரின் தனிப்பட்ட சொத்து அல்ல என்று கூறியவர், காங்., ஆட்சியின் போது நடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை, வீடியோ கேம் என்று மோடி விமர்சித்திருப்பது, மோடி நமது ராணுவத்தினரை அவமதித்த செயல் என்று கண்டனம் தெரிவித்தார்.

’நாட்டின் காவலாளி திருடன்’ என்ற எங்கள் கோஷம் தொடரும்  என்று கூறிய ராகுல்,  எனது பேச்சு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. என் கருத்தில் ஏதோ தவறு இருப்பதாக உச்சநீதி மன்றம்  கூறியதாலேயே மன்னிப்பு கேட்டேன். ஆனால், நான்  பா.ஜ.,விடமோ அல்லது மோடியிடமோ நான் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

‘சவுடிகார் ஷோர் ஹாய்’ கோஷம் எங்களின் ஸ்லோகமாக இருக்கும், அது தொடரும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.

பயங்கரவாதி மசூத் அசார் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர். ஆனால், அவரை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பியது யார்?  என்று கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, பயங்கர வாதத்துக்கு பணிந்து அவரை விடுவித்தது, காங்கிரஸ் அல்ல, பாஜக அரசுதான் என்று கூறினார்..

காங்கிரஸ் ஆட்சியில் ஆயுத ஊழலில் ஈடுபட்டதாக என் மீது அமித்ஷா குற்றச்சாட்டு கூறியிருக் கிறார். எனக்கு தெரிந்து நான் எந்த தவறும் செய்யவில்லை. இது தொடர்பாக எந்த விசாரணைக் கும் தயாராக இருக்கிறேன். ஆனால் அதே நேரம் ரபேல் விவகாரத்திலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

ஐந்து வருடத்துக்கு முன் நரேந்திர மோடி 10-15 வருடம் ஆட்சி செய்வார். அவரை வெல்ல முடியாது என்று சொன்னார்கள். ஆனால் காங்கிரஸ் அவரை இடித்து தள்ளிவிட்டது. அது ஒரு வெற்று அமைப்பு. இன்னும் 10, இருபது நாளில் முழுவதுமாக வீழ்ந்துவிடும்’’ .

இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.