சென்னை: தற்போதைய நிலையில், சேப்பாக்கம் மைதானம், முதல் நாளிலிருந்தே சுழலுக்கு ஒத்துழைக்கும் வகையில் காணப்படுவதாக கூறியுள்ளார் இந்திய துணைக் கேப்டன் அஜின்கியா ரஹானே.
முதல் டெஸ்ட் போட்டியின்போது, சேப்பாக்கம் மைதானம் மோசமான முறையில் தயார் செய்யப்பட்டது. முதல் 2 நாட்கள் பந்துவீச்சுக்கு சுத்தமாக ஒத்துழைக்கவில்லை அந்த மைதானம். இதனால் இந்தியப் பந்துவீச்சை பிரித்து மேய்ந்துவிட்டது இங்கிலாந்து. எனவே, தற்போது மைதானம் வேறுவகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.
ரஹானே கூறியிருப்பதாவது, “ஆம், மைதானம் முற்றிலும் மாறுபட்டதாய் காட்சியளிக்கிறது. எனவே, முதல் நாளிலிருந்தே பந்துகள் சுழலத் தொடங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எப்போதுமே முதல் செஷனில் என்ன நடக்கிறது என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும் என விரும்புபவன் நான்.
முதல் டெஸ்ட் போட்டியில் நிகழ்ந்ததை மறந்தாக வேண்டும். தற்போதைய நிலவரம் சிறப்பாக உள்ளதென்று நாங்கள் அறிவோம். எனவே, இந்த சூழலைப் பயன்படுத்தி எங்களின் முயற்சியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்” என்றார் ரஹானே.