சென்னை:
தமிழக சட்டமன்ற நிகழ்வுக்ளுக்கு எதிராக போட்டி சட்டமன்ற கூட்டத்தை திமுக இன்று அண்ணா அறிவாலயத்தில் கூட்டியது.
இதில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பங்கேற்ற நிலையில், இரண்டடை இலை சின்னத்தில் ஜெயித்த கருணாசும் கலந்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அப்போது, எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர்களை கூவத்தூர் அழைத்து சென்ற சம்பவத்துக்கு நானே ஆதாரம் என்று கூறினார்.
நேற்று தொடங்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், ஸ்டெர்லைட் பிரச்சினையை எழுப்பி, முதல்வர் எடப்பாடி பதவி விலகும்வரை சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டோம் என ஸ்டாலின் அறிவித்தார். அதையடுத்து போட்டி சட்டமன்றம் கூட்டப்படும் என்றும் கூறினார்.
அதன்படி இன்று, அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டத்துக்கு சபாநாயகராக, திமுக சட்டப் பேரவை கொறடா சக்கரபாணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இநத கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். அதிமுக கூட்டணியிலிருந்து வெற்றிபெற்ற முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த கருணாஸும் கலந்துகொண்டார்.
போட்டி சட்டமன்றத்தில் பேசிய கருணாஸ், சட்டமன்றத்தில் எனக்கு கச்சேரி நடத்த வாய்ப்பு கொடுத்த சபாநாயகர், நேற்று மக்கள் பிரச்சனையை பற்றி பேச வாய்ப்பு கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு யார் அனுமதி கொடுத்தது என்தற்கு, ஒரு துணை வட்டாட்சியர் அனுமதி கொடுத்தார் என்பது எந்த அளவுக்கு கேவலமாக இருக்கிறது. அதனை நான் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று ஒரு முதல் அமைச்சர் சொல்லுகிறார்.
இது ஒட்டுமொத்தமாக இந்த நிர்வாகத்திற்கான சீர்கேடு அல்லவா என்ற கேள்வியைத்தான் நான் கேட்டேன். இதற்காக எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை அகற்றி உள்ளார்கள் என்று கூறினார். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எனக்கு பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேரை அமர்த்தி இருந்தார். ஆனால், நேற்று நான் அரசாங்கத்திற்கு எதிராக பேசியதை தொடர்ந்து, இரவோடு இரவாக எனக்கு பாதுகாப்பாக இருந்த அதிகாரிகள் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறினார்.
மேலும், இன்றைக்கு நடக்கக் கூடிய தவறுகளை சுட்டிக்காட்டவே கூடாது என்றால் அது என்ன ஜனநாயகம்? எனது தொகுதி மக்கள் குறைகளை களையக்கோரி மனு கொடுக்கிறார்கள். அதன்மீது நடவடிக்கை எடுங்கள் என்றால், மறுப்புதான் வருகிறது. சத்துணவுத் திட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது? கணவனை இழந்தவர்கள், கைக்குழந்தையோடு தவிப்பவர்கள் எப்படி இந்த மண்ணில் வாழ்வது என்று போராடிக்கொண்டிருப்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட அந்த திட்டத்திற்கு யாரையாவது பரிந்துரை செய்தால், அவர்களிடம் லட்சக்கணக்கில் என லஞ்சம் கேட்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
அப்போது, சபாநாயகர் சக்கரபாணி குறுக்கிட்டு, மாண்புமிகு உறுப்பினர் ஆதாரங்கள் இல்லாமல் இப்படி குற்றச்சாட்டு சொல்லக்கூடாது என கருணாசிடம் கூறினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய கருணாஸ், நான் ஆதாரத்தோடுதான் பேசுகிறார். நான்தான் ஆதாரம் என்றார். கூவத்தூருக்கும் நான்தான் ஆதாரம். சட்டமன்றத்திற்கும் நான்தான் ஆதாரம். எனது தொகுதிக்கும் நான்தான் ஆதாரம் என்று ஆவேசமாக கூறினார்.
மனிதனுடைய வாழ்க்கைக்கு பணம் அவசியம் தான் அதற்காக. பணத்திற்காகவே ஒரு வாழ்க்கை என்றால் அது வாழ்க்கையே அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம், மாண்புமிகு என்று அழைக்கப்படும் நாம், இந்த மக்களிடத்திலே மாண்போடு நடத்துக்கொள்ள வேண்டாமா? என்றும், தமிழகத்துக்கு விடிவு காலம் கிடைக்கும் என்றால் கூவத்தூர் ரகசியத்தை சொல்லவும் தயங்க மாட்டேன் எனவும் ஆவேசமாகவும், அதிரடியாகவும் கூறினார்.