சென்னை: “மாணவி சிந்துவின் மனஉறுதி கண்டு பெருமிதம் கொள்கிறேன்”, அவருக்கு தேவையான சிகிச்சையை அரசு வழங்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில், பிளஸ்2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சென்னை கோடம்பாக்கம் பகுதியை பிளஸ்2 படித்து வரும் மாணவி சிந்து தேர்வை எழுதினார். முன்னதாக இவர் கடந்த 2020ஆம் ஆண்டு தோழி வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்ததால் கால் எலும்புகள் முறிந்ததுடன், தாடையின் ஒரு பகுதி முழுதும் சேதம் அடைந்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட, இவருக்கு 10க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாக மாணவி சிந்து தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், அவரது தந்தையார், சிந்துவை தேர்வு மையத்துக்கு அழைத்து வந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலின், மாணவி சிந்துவிற்கு தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
“வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம்!” கடுமையான நெருக்கடிகளின்போதுதான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும். விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்.
தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைக்கொண்டு, தேர்வுகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்! மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும்!
என கூறியுள்ளார்.