உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு வெளியானவுடன், “நான் கௌசல்யா அப்பா பேசுகிறேன்” என்ற ஒரு ஆடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், “நான் கௌசல்யா பேசுகிறேன்” என்ற தலைப்பில், தமிழக முன்னாள் டி.ஜி.பி. திலகவதி ஐ.பி.எஸ். எழுதியதாக சமூகவலைதளங்களில் ஒரு கவிதை வைரலாகி வருகிறது. இது குறித்து பத்திரிகை டாட் காம் இதழிலும் வெளியிட்டோம்.
திலகவதி ஐ.பி.எஸ். அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது, இது தான் எழுதிய கவிதை அல்ல என்று மறுத்தார். மேலும், “இதை எழுதியது யோரோ.. அவருக்கான அங்கீகாரம் தரப்பட வேண்டும்” என்றார்.
நமது கருத்தும் அதுதான்..
இந்த நிலையில் திலகவதி (Thilagavathi Thilo) என்ற முகநூல் பதிவர் எழுதிய கவிதை இது என்பது தெரியவந்தது. அந்தக் கவிதை…
நான் கௌசல்யா பேசுகிறேன்..
தத்தித் தவழும் வயதில் என்
பசி தீர்த்த நீங்கள்…
பெற்ற மகளின் காதலை
கொச்சையாய் பேசினீர்கள்…
பிஞ்சுக் கால்களால்
உங்கள் நெஞ்சில் உதைத்த
காலுக்கு சொந்தக்காரியை
“ஓடுகாலி” என
ஊரார் முன்னிலையில்
அசிங்கப்படுத்தினீர்கள்
பள்ளிக் கூடத்தில் சேர்த்து
அழகுப்பார்த்த என்னை
படுக்கைக்கு ஆசைப்பட்டு
காதலித்தேன் என
நாகூசாமல் கூறினீர்கள்…
பாவடை தாவணியிட்ட என்னை
குல தெய்வமாயய் கொண்டாடிய நீங்கள்
வார்த்தைகளால் நிர்வாணப்படுத்தினீர்கள்.
கழுத்துக்குச் சங்கிலியோடும்,
காதுக்கு தோடும்,
வாங்கித் தந்த நீங்கள்
என்னை இருமுறை
கடத்தினீர்கள்…
உலகில் எந்த அப்பனும்
செய்யக்கூடாத கேவலமிது..
அடக்கத்தில் ஒழுக்கத்தில்
சிறந்தவளாக இருக்கச் சொல்லி
அன்பின் விதையில் முளைத்த காதலிற்காய்
என்னை சித்ரவதை செய்தீர்கள்…
நீ…சொல்..
இல்லை
காதலை எதிர்ப்பவர்கள் யாரோ சொல்லட்டும்….
நான் பிரிந்து சென்றதற்காகவா
அரிவாள் எடுத்தாய்.. ?
உன் பேச்சை மீறியதற்காகவா
அரிவாள் எடுத்தாய்… ?
இல்லை….
உன் சாதிக்காக…
“நம்ப சாதிப் பொண்ணு
கீழ் சாதிப் பயல காதலிக்கலாமா”
என்ற மனித மிருகங்களின்
சாடலுக்காக…
உன் கேவலமான
கௌரவத்திற்காக…
அரிவாள் எடுத்தாய் !!
நான் கேட்டதை வாங்கித் தந்தாய்…
மனம் விரும்பி வாழ
உன்னைப் போல..
என்னைப் பார்த்துக்கொண்ட
தன் அம்மாவைப் போல்
நான் இருப்பதாக என்மீது
அன்பு செலுத்திய…
என் சங்கரைக் கேட்டேன்
வாங்கித் தரவில்லை…
சரி…
வாழவாவது விட்டாயா…??
கனவுகளைச் சுமந்த
அந்த கல்லூரி மாணவனை
உன்னைப் போலவே
அவன் தந்தை வளர்த்த
அந்த செல்லப் பிள்ளையை
என்மீது கொண்ட அன்பிற்காக
என்னை காதலித்த குற்றத்திற்காக
துடிக்க துடிக்க
நடுத்தெருவில் வெட்டினாயே…
சாதி வெறிப்பிடித்த காட்டுமிரண்டியே…
நீ
மனிதனே இல்லை…
பிறகெப்படி
என் தந்தையாவாய் ???
காதலின் அருமைப் புரியாத
கல்யாணத்தின் பெயரால்
பெண்ணைப் புணர்ந்துபோடும்
கலாச்சாரத்தின் சொந்தக்காரனே…
என்ன தெரியும் உனக்கு காதலைப் பற்றி… ?
“அப்பாவுக்கு தூக்கு தண்டனை
வாங்கித் தந்த பாவி”
என்று என்னை வசைப்பாடும் வாய்களைக் கேட்கிறேன்….
“கௌசல்யாவின் அப்பா நான்”
என்ற பாசாங்குக் கவிதைக்கு பரிதாபப்படும்
மனங்களைக் கேட்கிறேன்…
“காமத்திற்காக அப்பாவை தூக்கிலேற்றிய விபச்சாரி”
என வாதிட்ட உங்களைக் கேட்கிறேன்…
காதலனின் கரம் கோர்த்து
ஆயிரம் கனவுகளுடன்
தடைக்களை தாண்டி
கைசேர்ந்த காதலோடு
வீதியில் நடக்க….
உன் கண்முன்னே
உன்னை நேசித்த
உன்னால் நேசிக்கப்பட்ட
ஒருவன்
உடல் முழுதும்
இரத்தம் ஒழுகி
நிலைக்குலைந்து உடல்சரிந்து
செத்துமடிந்த வலியை
உணர்ந்திருக்கிறீர்களா ???
என் அப்பாவின்
தண்டனைக்கு நியாயம்
கேட்கும் உங்கள் மனசாட்சிகள்…
என் சங்கர்
வெட்டி வீசப்பட்ட போது
கள்ள மௌனம்
கொண்டதெனில்….
சங்கருக்காக்க
பேசாத வாய்கள்
சாதிக்காய் பேசுகிறதெனில்
நீங்களும் சாதிய
அழுக்கு படிந்த
மனித மிருகங்கள்….
நீங்களும் என் சங்கரைக் கொன்ற
கொலைகாரர்கள்…
ஆம்
தூக்குமேடை ஏற்றினேன்…
என் அப்பாவை அல்ல…
பெற்ற மகளை
வெட்ட பணம் கொடுத்த
ஒரு சாதி வெறிப்பிடித்த
அயோக்கியனை…
அவன் அப்பன் அல்ல
அயோக்கியன்… கொலைகாரன்..
மனித மிருகம்……..!