சிவகங்கை: ஒவ்வொருவரின் குடும்பத்திலேயும் அண்ணனாக, தம்பியாக, தந்தையாக, நண்பனாக இருக்கிறேன் என்ற முதல்வர் ஸ்டாலின் காளையார் கோவில்மக்களுக்காக ரூ.616 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
களஆய்வு பணிக்காக 2 நாள் சுற்றுப்பயணமாக சிவகங்கை மாவட்டத்துக்கு வந்துள்ள முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். நேற்று காரைக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன், பல்வேறு இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகளை சந்தித்து, மக்கள் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.
இன்று காலை சிவகங்கையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவிடம் அருகில் மருது சகோதரர்களுக்கு சிலை அமைக்கப்பட உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில், ரூ.50 லட்சம் செலவில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் சிலையினைத் திறந்துவைத்தார்.
பின்னர் மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி வளாகத்தில் மக்களுக்கு 40,000 நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிவகங்கை அருகே நகரம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாளுக்குவேலி அம்பலம் சிலை மற்றும் மணி மண்டபத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ரூ.89 கோடியில் சிவகங்கையில் ஆட்சியர் அலுவலகத்துக்கு புதிய கூடுதல் கட்டடம் கட்டப்படும் என்று கூறியதுடன், இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.
தொடர்ந்து பேசியவர், சிவகங்கை, திருப்பத்தூர், காளையார்கோவில் உள்ளிட்ட பகுதி மக்களுக்காக ரூ.616 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் திமுக ஆட்சியில் கட்டிக் கொடுக்கப்பட்டது. சிவகங்கையில் புதிய நகராட்சி கட்டிடம், மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டது. ஒவ்வொருவரின் குடும்பத்திலேயும் அண்ணனாக, தம்பியாக, தந்தையாக, நண்பனாக இருக்கிறேன். ஒவ்வொரு மனிதரையும் நாடிச் சென்று உதவுவதுதான் திராவிட மாடல் அரசு. அதேபோல் திருப்பத்தூரில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.