டில்லி,

நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், புதுச்சேரியில் காரைக்கால் உட்பட பல இடங்களில் பூமிக்கடியில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்டத்துக்கு 22 நிறுவனங்க ளுடன்  மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது.

தமிழகத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெடுவாசல் கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் உறுதி அளித்ததின் பேரில், போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்பட இந்தியா முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் டில்லியில் இன்று கையெழுத்தானது.

அனைத்து ஒப்பந்தங்களிலும் பெட்ரோலியத்துறை சார்பில் உயரதிகாரி ராஜேஷ் மிஸ்ரா கையெழுத்திட்டார்.

இந்த ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க 22 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று டில்லியில் கையெழுத்தானது. அதில்,  4 பொது துறை நிறுவனங்களும், ஒரு வெளிநாட்டு நிறுவனமும், 17 தனியார் நிறுவனங்களும் அடங்கும்.

இதன் மூலம் ரூ50,000 கோடி வருவாய் கிடைக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.

மேலும், “தமிழக மக்களிடம் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்துவோம்” என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

நெடுவாசல் மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யும், பெட்ரோலியத்துறை அதிகாரிகள் விரைவில் தமிழகம் வந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நெடுவாசல் மக்கள் பயப்பட தேவையில்லை, மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

மக்களின் அச்சத்தை போக்கிவிட்டு ஹைட்ரோகார்பன் திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மத்திய அரசின் இந்த புதிய ஒப்பந்தம் காரணமாக நெடுவாசல் கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ள னர்.

‘ஹைட்ரோகார்பன் திட்டத்தை, மக்களின் அனுமதி இல்லாமல் செயல்படுத்த மாட்டோம் என்றும் மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்ததால்தான்  போராட்டத்தைக் கைவிட்டோம். ஆனால் இப்போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதால், மீண்டும் போராட்டத்தைத் தொடர்வோம்’ என்று போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க கர்நாடகாவின் முன்னாள் பாரதியஜனதா எம்.பியின் குடும்ப நிறுவனமான ஜெம் ஆய்வக நிறுவனத்துக்கும்,  புதுச்சேரி, காரைக்கால் பகுதியில், ஹைட்ரோகார்பன் எடுக்க பாரத் ரிசோர்ஸ் (Bharat Petro Resources Ltd) நிறுவனத்துக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.