சென்னை:

சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் இணைந்து உருவாக்கிய “என் தேசம் என் உரிமை” கட்சியினர், டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள நாளை செல்கிறார்கள்.

தமிழக விவசாயிகள் டில்லியில் 14 நாட்களாக நடு சாலையில் அரைநிர்வாண போராட்டம் நடத்தி வருகிறார்கள். அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், நதி நீர் இணைப்பு நடக்க வேண்டும் என்பது உட்பட வாழ்வாதார பிரச்சினைகளுக்காக போராடி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு பாராமுகமாகவே இருக்கிறது.

இந்த நிலையில்,சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் இணைந்து உருவாக்கிய “என் தேசம் என் உரிமை” கட்சியினர், டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள நாளை செல்கிறார்கள்.

இது குறித்து அந்த கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எபினேசர், “அந்த விவசாயிகளின் போராட்டத்தில் நாளை முதல் எங்களையும் இணைத்துக்கொள்ள இருக்கிறோம். ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி வெற்றி பெற்றதோ அதுபோல விவசாயிகளின் போராட்டமும் வெற்றி பெறும்” என்று  தெரிவித்தார்.

கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளும் போராட்டத்தில் கொண்டு வந்தார்கள்.  டில்லியில் இருக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சில, விவசாயிகளுக்கு உணவு அளிக்கின்றன. மாணவர்கள் இயக்கங்கள் சிலவும், தனிப்பட்ட முறையில் மாணவர்கள் பலரும் உதவி வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து இளைஞர்கள் சென்று போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.