தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் திங்களன்று பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

பல கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்களால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஹைதராபாத் மாநகர காவல்துறை இணை ஆணையர் ஸ்டீபன் ராகவேந்திரர் நேரடியாக களத்தில் இறங்கியும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு செய்த காவல்துறையினர் மழை காரணமாக ஹைதராபாத் நகரில் உள்ள ஐ.டி. நிறுவன ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் வீட்டிற்கு செல்ல முயன்றதால் சாலையில் பல கிலோமீட்டர் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து Ikea, பயோ டைவர்ஸிட்டி, ராய்துர்கம் மற்றும் கச்சிபௌலி ஆகிய பகுதியைச் சுற்றியுள்ள அலுவலகங்கள் மற்றும் ஐ.டி. அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள் வெளியேற நேர அட்டவணையை போக்குவரத்து காவல்துறை நேற்று வெளியிட்டுள்ளது.

இதன்படி பிற்பகல் 3 மணி, 4:30 மணி மற்றும் 6 மணி என வெவ்வேறு நேரங்களில் எந்தெந்த வளாகங்களில் உள்ள அலுவலக ஊழியர்கள் வெளியேற வேண்டும் என்று வழிகாட்டுதலை காவல்துறை வெளியிட்டுள்ளது.

மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து அலுவலகங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை இந்த நேர அட்டவணையை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.