சென்னை:

மாலத்தீவு அருகே நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி வருவதால் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் உடனே கரை திரும்ப மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

வங்க கடலில உருவாகி வரும் காற்றத்தழுத்த தாழ்வு பகுதி காரணமாக குமரி மாவட்டம், கேரள கடற்கரை பகுதி உள்பட ராமேஸ்வரம் பகுதி மீனவர்களும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 8ந்தேதி உருவான இந்த காற்றழுத்த தாழ்வு நிலை  மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. தற்போது இது புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றத்தழுத்த தாழ்வு பகுதி புயலாகி மாறும் என்றும், அதன் காரணமாக, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதிகளில்  சூறாவளி காற்றும், பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு  ஓகி புயல் காரணமாக குமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது உருவாகி வரும் புயல் காரணமாக சேதம் எற்படாத வகையில்,  கடலோர கிராமங்களில் வானிலை ஆய்வு மைய அறிக்கைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாகவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டும் வரும் நிலையில், மேலும் சில நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்களை உடனே கரைக்கு திரும்பும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.