கரீபியன் கடற்பகுதியில் அமைந்திருக்கும் தீவான ஹைதியில் கோர தாண்டவம் ஆடிய ஹரிக்கேன் மேத்யூ இதுவரை 800 மக்களை பலிவாங்கியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அரசு செய்த முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்பு பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது.
harricane2
இந்த புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது கருப்பின மக்களை அதிகமாகக் கொண்ட ஏழைநாடான ஹைதிதான். புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 145 மைல் வேகத்தில் வீசிய புயல் மற்றும் பலத்த மழைக்கு பல்லாயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்து விட்டன. தெருக்களில் காணும் இடமெல்லாம் பிணக்குவியலாக காட்சி அளிக்கிறது.
இங்கு 61,500 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலிம் மேற்பரப்பில் வீசிய பேய்க்காற்று கடல் அலைகளை அதனை ஒட்டியுள்ள கிராமங்கள் வரைக்கும் இழுத்துவந்து விட்டது. சுனாமி போல கிராமங்களுக்குள் நுழைந்த தண்ணீர் கிராமங்களை உருக்குலைத்துவிட்டது.
ஹைதி ஏற்கனவே 2010-இல் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நிலையில் மீண்டும் அந்த ஏழைநாடு ஒரு இயற்கை சீற்றத்தால் சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. மரங்கள் பலவீனமான வீடுகள்மேல் விழுந்து வீடுகளை தரைமட்டமாக்கி போட்டிருக்கிறது. அந்த இடிபாடுகளுக்குள் இன்னும் ஏகப்பட்ட பிணங்கள் கிடக்கின்றன. கடுமையான உணவுப்பற்றாக்குறை அங்கு நிலவுகிறது. தண்ணீருடன் சாக்கடை கலந்துவிட்டதால் காலராவில் மட்டும் 7 பேர் இறந்துள்ளனர்.
ஹைதியில் நிலைமை இப்படியிருக்க, ஹரிக்கேன் மேத்யூ சற்று வேகம் குறைந்து மணிக்கு 120 மைல் வேகத்தில் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவையும் பதம் பார்த்திருக்கிறது. ஆனால் அங்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. ஆனாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே மரங்கள் சாலைகளில் விழுந்து கிடக்கின்றன. மின் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது.
புளோரிடாவைக் கடந்து ஜியார்ஜியா, தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா ஆகிய பகுதிகளுக்கு செல்லும்போது புயல்மேலும் வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.