பத்திரிகைகளில் வெளியான புகைப்படம்

போபால்

க்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள உறவினரை காண வந்த குழந்தைகளின் முகத்தில் முத்திரை குத்திய ஜெயில் அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு போபால் மத்திய சிறையில் உள்ள தங்கள் உறவினர்களைக் காண பலரும் வந்திருந்தனர்.  அதில் இரு குழந்தைகளின் முகத்தில் அடையாளத்துக்காக முத்திரை குத்தப்பட்டிருந்தது புகைப்படமாக வட இந்தியப் பத்திரிகைகளில் வெளி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து மத்திய பிரதேச மனித உரிமை ஆணையம் சிறை அதிகாரிகளுக்கு கடும் கண்டனத்துடன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  இது மனித உரிமை மீறல் எனவும், இதை செய்த சிறை ஊழியர்களின் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த நோட்டீசில் சொல்லப்பட்டிருந்தது.

இதற்கு சிறை அதிகாரிகள், “அன்று ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு 8500 பேருக்கு மேல் பார்வையாளர்கள் இருந்தனர்.  கைதிகளுக்கும், பார்வையாளர்களுக்கும் வித்தியாசம் காண கைகளில் முத்திரை குத்துவது வழக்கம் தான்.   மேலும் நிறைய பார்வையாளர்கள் இருந்ததால் கவனக்குறைவாக கைகளுக்கு பதில் முகத்தில் முத்திரை இட்டிருக்க நேர்ந்திருக்கலாம்.   இது தற்செயலாக நடந்தது.” என கூறி உள்ளனர்.

மேலும், “இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும்.  இது வேண்டும் என்றே செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளனர்.

மனித உரிமை ஆணையம், இது குறித்து சிறையின் மூத்த அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதி உள்ளது.  அதில் இன்னும் ஏழு நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை வெளியிட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.