பழனி: பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் விலை முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டு உள்ளது.  அறநிலையத்துறையின் இந்த நடவடிக்கை பக்தர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடு பழனி. இங்குள்ள முருகனை  தினசரி ஆயிரக்கணக்கானோர் தரிசித்திது வருகின்றனர்.  தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி  உள்பட முருகனுக்கு உகந்த நாட்கள் மற்றும்  திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலவச பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பழனிக்கு வரும் பக்தர்கள், தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பஞ்சாமிர்தம் வழங்கி வாழ்த்துவதும் வழக்கம். இதனால், அங்கு விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தத்துக்கு கடும் கிராக்கி ஏற்படும். அதனால் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு பக்தர் களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேவஸ்தானம் மட்டுமின்றி பழனி பஸ் நிலையம், அடிவாரம், மின் இழுவை ரெயில் நிலையம், மலைக்கோவில் வெளிப்பிரகாரம் போன்ற பல்வேறு இடங்களிலும் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பஞ்சாமிர்தம்,  ½ கிலோ எடையில் டப்பா, டின் என 2 வகைகளில் பஞ்சாமிர்தம் விற்கப்படுகிறது. டப்பாக்களில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் ரூ.35க்கும், டின்களில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்றுமுதல், பஞ்சாமிர்தம் விலையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அறநிலைய உயர்த்தி உள்ளது.  பஞ்சாமிர்தத்தின் விலையை ஒரு டப்பாவுக்கு ரூ.5 விலை உயர்த்தி கோவில் நிர்வாகம் விற்பனை செய்தது. டின் பஞ்சாமிர்தம் ரூ.40ல் இருந்து ரூ.45க்கும், டப்பா பஞ்சாமிர்தம் ரூ.35ல் இருந்து ரூ.40க்கும் விலை உயர்த்தி விற்கப்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவில் நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பஞ்சாமிர்தத்தின் விலையை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது என பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். வணிக நிறுவனங்கள் போல லாப நோக்கில் தேவஸ்தானம் செயல்படுகிறது என கூறி உள்ளனர்.

ஆனால், ஆவின் நெய் மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்ந்துவிட்டதால் பஞ்சாமிர்தம் விலையை உயர்த்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.