சென்னை: சென்னையில் பெய்து வரும் கனழை காரணமாக, ஆங்காங்கே தேங்கும் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகளும், ஊரியர்களும் மின்னல் வேகத்தில் பணியாற்ற வருகின்றனர். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், மழை வெள்ளம் தொடர்பான புகார்கள், மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்காணிக்க  மாநகராட்சி செய்துள்ள முன்னேற்பாடுகள் என்ன என்பதை மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.


சென்னையில் மழைநீர் பாதிப்பு, கழிவுநீர்பாதிப்பு, மரம் விழுதல் போன்ற இயற்கை பேரிடர்களை சமாளிக்க சென்னை மாநகராட்சியில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அதில், புகார்கள் அளிப்பது எப்படி, அதை சரி செய்வதுஎப்படி என்பது குறித்து   மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி வரவிருக்கக்கூடிய பெருமழையை எதிர்கொள்ளும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் பருவமழை கட்டுப்பாட்டு அறை (ICCC) செயல்பட்டு வருகிறது. இந்த ICCC என்பது அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் திட்டமாகும். இதில், 1913 உதவி மையம், நம்ம சென்னை ஆப் (Namma Chennai App), கட்டுப்பாட்டு அறை, மின்சார வாரியம், மெட்ரோ வாட்டர், காவல், தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து செயல்படுகிறது.

இதில் பொதுமக்கள் எளிதாக தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். சென்னை மாநகராட்சியை 1913 மூலமாக எளிதாக தொடர்பு கொள்ளலாம். ஒரே நேரத்தில் 100 பேர் கூட தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர நம்ம சென்னை ஆப் மூலம் வரும் புகார்களை சம்பந்தப்பட்ட மண்டலகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக ஒரு செயலியை தொடங்கி இருக்கிறோம். அதன்மூலமாக மண்டல வாரியாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும், சென்னை மாநகராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப மண்டல வாரியாக பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் புகார்களை கவனித்து வருகின்றனர். வரக்கூடிய புகார்களுக்கு கூடுமானவரை 1 மணி நேரம் முதல் 5 மணி நேரத்திற்குள், நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம்.

மேலும், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் வரும் புகார்களையும் கண்டறிந்து ICCC மூலமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். ICCC 24 மணி நேரம் செயல்படக்கூடிய வகையில் ஏற்பாடு செய்துள்ளோம்,. எனவே பொதுமக்கள் 24 மணிநேரமும் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

முன்னதாக பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் பருவமழை கட்டுப்பாட்டு அறையினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் திருமதி பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.

சபாஷ் மாநகராட்சி: கொட்டும் மழையிலும் மழைநீர் அகற்றும் பணியில் இரவோடு இரவாக களமிறங்கிய மேயர் பிரியா…