சென்னை: போக்சோ வழக்குகளை காவல்துறையினர்எப்படி கையாள வேண்டும்? விசாரணை நடத்தும் முறை, மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது எப்படி? என்பது தொடர்பான சுற்றறிக்கையை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, சிறுவர்கள்மீதான வன்முறை, பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், போக்சோ வழக்குகளை எப்படி கையாள வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக சைலேந்திரபாபு வெளியிட்ட சுற்றறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி நடைபெற்ற போக்சோ சட்ட வழக்குகள் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்களின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
போக்சோ சட்ட வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கை நகலை, சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அது மரணமாக இருந்தாலும் அல்லது பிற குற்றங்களாக இருந்தாலும் உரிய நீதிமன்றத்திற்கு முதல் தகவல் அறிக்கை சென்றடைந்தவுடன், உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து விசாரணை அதிகாரிகளும் பிரிவு 164 குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் அல்லது போக்சோ பிரிவுகளில் பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலங்களை பெறும்போது வழக்கமான முறையில் செய்வதுபோல் காணொளி பதிவு செய்யக்கூடாது. ஒவ்வொரு வழக்கையும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.
முக்கியமான வழக்குகளில் நீதிமன்றத்தில் இருந்து காணொளி பதிவு எடுப்பது தொடர்பான ஆணை பெறப்பட்டாலோ அல்லது விசாரணை அதிகாரி தேவை எனக் கருதினாலோ மட்டுமே காணொளி பதிவு செய்யப்படல் வேண்டும்.
அவ்வாறு காணொளி பதிவு செய்யப்படும்போது சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் துறையை சார்ந்த புகைப்பட கலைஞர்களை கொண்டே காணொளிப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யப்பட்ட காணொளி பதிவுகளை மிகவும் பாதுகாப்பான முறையில் பராமரிக்க வேண்டும்.
போக்சோ வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் இடைக்கால நிவாரணம் பெறுவதற்கான உரிமை குறித்து பாதிக்கப்பட்டவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தை அணுகி இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம் என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டும்.
மேலே உள்ள அறிவுறுத்தல்கள் போக்சோ சட்ட வழக்குகளின் அனைத்து விசாரணை அதிகாரிகளாலும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுதொடர்பாக அனைத்து நகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தங்களின் கீழ் பணிபுரியும் அனைத்து புலனாய்வு அதிகாரிகளுக்கும் மேற்கூறிய அறிவுரைகளை தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சுற்றறிக்கை குறிப்பாணையினை பெற்றுக் கொண்டமைக்கு ஏற்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.