நாளை கோகுலாஷ்டமி (30/08/2021) எப்படிக் கொண்டாடுவது?

Must read

நாளை கோகுலாஷ்டமி (30/08/2021) எப்படிக் கொண்டாடுவது?

எளிமையான முறையிலும் கிருஷ்ணனின் பிறப்பைக் கொண்டாடலாம். கண்ணனை வழிபாடு செய்ய நமக்குத் தேவையானவை, கிடைக்கும் கொஞ்சம் மலர்கள், ஏதேனும் ஒரு நிவேதனம், வாய் நிறைய அவன் நாமாவளி, அவ்வளவுதான்.

கோகுலாஷ்டமி அன்று மாலையில் வீட்டைச் சுத்தம் செய்து கிருஷ்ணர் படம் இருந்தால் அதை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். விளக்கேற்றி வைத்து ஏதேனும் ஒரு ஊதுபத்தி போன்ற தூபம் காட்ட வேண்டும்.  பலர் வீடுகளில் கிருஷ்ணர் கால் வரைவது வழக்கம். சின்னக் குழந்தையாகக் கிருஷ்ணன் நடந்து நம் வீட்டுக்குள் வருவதாக ஐதிகம். அப்படிக் கோலமிடுகிறவர்கள் வீட்டு வாசலில் இருந்து சுவாமி இருக்கும் இடம்வரைக் கோலமிட வேண்டும்.

கிருஷ்ணஜயந்தி என்றாலே நமக்கு நினைவுக்கு வருபவை பட்சணங்கள்தான். முறுக்கு, சீடை, அதிரசம் என்று பலகாரங்கள் பலவும் செய்து கிருஷ்ணனுக்குச் சமர்ப்பிக்கும் வழக்கம் உண்டு. ஆனால், இது எல்லோருக்கும் சாத்தியமானவை அல்ல. இவை எல்லாம் இருந்தால்தான் கிருஷ்ணன் அருள் கிடைக்கும் என்றும் இல்லை. கிருஷ்ணனுக்கு மிகவும் பிரியமான இரண்டு நிவேதனங்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலே அவனின் அருளைப் பெற்றுவிடலாம்.

ஒன்று குசேலர் கொண்டு சென்றது, மற்றொன்று கோபிகைகளின் இல்லம் புகுந்து அவரே திருடி உண்டது. கிருஷ்ணனுக்கு அவல் போல விசேஷமான நிவேதனம் வேறு இல்லை. சுதாமா கட்டிக் கொண்டுவந்த கொஞ்சம் அவலை அன்போடு ஏற்றுக்கொண்டு கிருஷ்ணர் அவருக்கு அளித்த செல்வங்கள் ஏராளம். செல்வ வளம் வேண்டுபவர்கள், வறுமையிலிருந்து விடுபட விரும்புகிறவர்கள் கிருஷ்ணனுக்குக் கொஞ்சமாக அவல் நிவேதனம் செய்தாலே போதுமானது. சாதாரண அவல் தந்து வேண்டுவனவற்றைச் சாதித்துக் கொள்ளலாம்.

மற்றொரு நிவேதனம் நவநீதம். கோபிகைகள் கண்ணன் வந்து தங்கள் வீட்டுக்கு வந்து வெண்ணெய் உண்ண மாட்டானா என்று ஏங்குவார்களாம். வெண்ணெய் என்பது தயிரிலிருந்து பிரிந்து தயாராவது. இந்த உலக இன்பங்களிலிருந்து பிரிந்து உயர்ந்த பக்குவமான நிலையை அடைவதுவே வெண்ணெய்யின் குறியீடு. அத்தகைய வெண்ணெய்யைக் கண்ணனுக்குச் சமர்ப்பித்தால் நமக்குப் பிறவித் துன்பம் இல்லாமல் வைகுண்டப் பேற்றினை அருள்வான் என்பது ஐதிகம். எனவே, இந்த இரண்டு நிவேதனங்களில் ஏதேனும் ஒன்றைப் படைத்து கண்ணனை வரவேற்கலாம்.

கலியுகத்தின் தர்மங்களில் உயர்ந்தது நாமசங்கீர்த்தனம். கிருஷ்ணனின் நாமத்தைப் போற்றும் பஜனைப் பாடல்களையும் பாட வேண்டும்.   எங்கெல்லாம் பக்தர்கள் நாமசங்கீர்த்தனம் செய்கிறார்களோ அங்கெல்லாம் பகவான் நாராயணன் அமர்ந்து கேட்பார்’ என்கிறார் நாரத மகரிஷி.   எனவே, கிருஷ்ணனைப் போற்றும் பாடல்களைப் பாடுங்கள். அதுவே உயர்ந்த பூஜையாகும். பாடத் தெரியாதவர்கள் கிருஷ்ணனின் நாமத்தை ஜபித்துக்கொண்டே இருக்க வேண்டும். நாம ஜபமும் நாம சங்கீர்த்தனமே கிருஷ்ணனைத் திருப்தி செய்யப் போதுமானவை என்பது ஆன்றோர் வாக்கு.

 

More articles

Latest article