கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் முதற்கொண்டு, நாம் தமிழர் கட்சி களம் காண்கிறது. தமிழகத்தில், தேர்தல் அரசியலில் பங்கேற்கும் சிறிய கட்சிகள் முதற்கொண்டு, பல பெரிய கட்சிகள் வரை, தேர்தல் என்று வந்துவிட்டால், தங்கள் அளவிற்கு பல்வேறான நெருக்கடிகளை சந்திக்கின்றன.
2006 சட்டமன்றம் மற்றும் 2009 மக்களவைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு, 10%க்கு மேல் வாக்குகளைப் பெற்ற தேமுதிகவுக்கு, 2011 சட்டமன்ற தேர்தல், நெருக்கடிகளை அளித்தது. எப்படியேனும், சில சட்டமன்ற உறுப்பினர்களையாவது பெற்றாக வேண்டுமென்ற நெருக்கடிதான் அது. இதுபோன்று பல்வேறு கட்சிகளும் நெருக்கடிகளை சந்தித்துள்ளன!
இந்த சட்டமன்ற தேர்தலில், சரத்குமாரின் கட்சி, பாரிவேந்தரின் கட்சி மற்றும் ஏ.சி.சண்முகத்தின் கட்சி என்று ஒவ்வொரு கட்சிக்குமே நெருக்கடி இருந்தது. கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படைக்குகூட ஒரு நெருக்கடி இருந்தது.
ஆனால், இந்த ‘நாம் தமிழர்’ கட்சியினுடைய கதை மட்டும் வித்தியாசமானது. இவர்கள் மட்டும்தான் எதைப்பற்றியும் கவலைப்படாமல், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, வெற்றியா? தோல்வியா? என்பது குறித்து நினையாமல், செயல்பட்டு வருகின்றனர்.
தேர்தலில் என்ன முடிவு வந்தாலும், இன்றைய நடைமுறையில், நெருக்கடியில்லாமல் ஒருவரால், எப்படி அடுத்தடுத்த தேர்தல்களை சந்திக்க முடிகிறது என்ற ஆச்சர்யம் நிச்சயம் எழாமல் இருக்க முடியாது.
ஆனால், சீமானின் நோக்கம் தேர்தலில் வெல்வதல்ல; அவர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, சில இடங்களிலிருந்து வரும் நிதியை வைத்து கட்சி நடத்துகிறார். அவரின் தேவை இனிமேல் வேண்டாமென சம்பந்தப்பட்டவர்கள் நினைக்கையில், அவர் தானாக காணாமல் போய்விடுவார் என்கின்றனர் சில விமர்சகர்கள்!
சில நாட்களுக்கு முன்னர், எங்கள் நோக்கம் தேர்தலில் வெல்வதல்ல; திமுகவை தோற்கடிப்பதே என்று அக்கட்சி கூறியதையும் நாம் இங்கே நினைவிற்கு கொண்டுவர வேண்டியுள்ளது மற்றும் அவர் என்ன பேசினாலும், அவர் எந்த தண்டனைகளுக்கும் ஆளாவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது!
இதுபோன்று இன்னும் பல. அதனால்தான் சீமான், மிகுந்த சவால்களைக் கொண்ட தேர்தல் களத்தில், குறிப்பிடும்படியான எந்தவித நெருக்கடிகளுக்கும் ஆட்படாமல் செயல்பட முடிகிறதோ என்ற கருத்துருவாக்கத்தை தவிர்ப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.