மோசடி புகாரில் எஸ்.ஆர்.எம். குழும நிறுவனர் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பலரும் அவர் மீது புகார் கணைகளை வீசிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் சூளையைச் சேர்ந்த பைனான்சியர் மோகன்குமார்.
மோகன்குமாரை நாம் சந்தித்தோம்.
அவர், “கடந்த 2004ம் ஆண்டும் எஸ்ஆர்எம் மெட்ரிகுலேஷன் பள்ளி சேர்மன் டி.ஆர்.பச்சமுத்து ரூ.70 லட்சம் லோன் வேண்டும் என என்னிடம் கேட்டார். உரிய ஆவணங்கள் கொடுத்தால் பணம் தருவதாகச் சொன்னேன். அதன்படி எஸ்ஆர்எம் குழும ஆடிட்டர் சுப்பிரமணி மற்றும் டி.ஆர்.பச்சமுத்து ஆகியோர் ஆவணங்களுடன் எனது அலுவலகத்துக்கு வந்தார்கள். பொத்தேரி, பல்லாவரம், உள்ளிட்ட பகுதியில் பச்சமுத்துவுக்கு சொந்தமாக உள்ள இடங்களின் ஐந்து ஆவணங்களை என்னிடம் அளித்தார்கள். அதை பெற்றுக்கொண்ட நான் அவர்களுக்கு 70 லட்சம் வழங்கினேன். அப்போது பச்சமுத்து உறுதிமொழிப்பத்திரம் மற்றும் வங்கி செலானில் கையொப்பம் இட்டுக்கொடுத்தார்.
இந்த நிலையில் பச்சமுத்துவிடம் பணத்தை திருப்பி கேட்டபோது, அவர் என்னை ஏமாற்றும் நோக்கில் பேசினார். ‘நான் உன்னிடம் பணம் எதுவும் வாங்கவில்லை, ஆடிட்டர் சுப்பிரமணி தான் உன்னிடம் பணம் வாங்கினார். எனவே நான் பணம் எதுவும் தர முடியாது. மீறி என்னை தொந்தரவு செய்தால் விபரீதம் ஆகிவிடும். நான் அரசியலில் முக்கிய புள்ளியாக இருக்கிறேன்” என்று மிரட்டுகிறார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். எனவே என்னை ஏமாற்றிய பச்சமுத்து மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தரும்படி இரண்டு மாதங்களுக்கு முன் சென்னை மாநகர போலீஸ் கமிசனரிடமும், மத்திய குற்றப்பிரிவு போலீசரிடமும் புகார் அளித்தேன்” என்றார் மோகன்குமார்.
“2004ம் வருடம் கடன் கொடுத்ததாக சொல்கிறீர்கள். பிறகு ஏன் இத்தனை வரும் காத்திருந்தீர்கள்.. முன்பே புகார் கொடுத்திருக்கலாமே” என்றோம்.
அதற்கு அவர், “பைனான்ஸ் தொழிலில் பலவித சிக்கல்கள் இருக்கின்றன. இதைத்தாண்டித்தான் நம்பிக்கையின் பேரில் தொழில் செய்கிறோம். பச்சமுத்து, கடன் தொகையை செக் ஆக வாங்க மாட்டார். கேஷ் (ரொக்கம்) ஆகத்தான் வாங்குவார். அதனால் வருமானவரி பிரச்சினைகள் இருப்பதால் என்னைப்போல் ஏமாந்த பெரும்பாலோர் புகார் கொடுப்பதே இல்லை. பிறகு 2009ம் வருடம் என் வீடு அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடந்தது.
அப்போது பச்சமுத்து எனக்களித்த டாக்குமெண்டுகளைப் பார்த்த அதிகாரிகள், அது குறித்து கேள்வி எழுப்பினர். ஆகவே நான் விவரத்தைச் சொன்னேன். இதையடுத்து பச்சமுத்துவுக்கும் வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை.
இந்த அளவுக்கு ஆகிவிட்டது.. இனி என்ன.. என்கிற எண்ணத்தில்தான் புகார் கொடுக்க தயாரானேன். அதே நேரம் பச்சமுத்துவின் அரசியல் செல்வாக்கு குறித்து யோசித்தேன். பிறகு எல்லாவித தயக்கங்களையும் உதறிவிட்டு புகார் கொடுத்தேன்” என்றார் மோகன்குமார்.
பிறகு அவரே, “சாதாரண பள்ளி ஒன்றை வைத்து நடத்திக்கொண்டு, சைக்கிளில் சென்று வந்த பச்சமுத்துக்கு இன்று பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்ந்ததின் ரகசியம் என் தெரியுமா” என்று கேட்டுவிட்டு மோகன்குமாரே தொடர்ந்தார்:
“பள்ளி நடத்திவந்த போதே.. அதாவது சுமார் இருபது இருபத்தியைந்து வருடங்களுக்கு முன்பே பச்சமுத்து, சீட்டிங் செய்ய ஆரம்பித்துவிட்டார். இரண்டு லட்சம் கடன் வாங்குவார்.. சரியாக கொடுத்துவிடுவார். அடுத்து ஐந்து, பத்து, இருபது என்று வாங்கி சரியாக கொடுத்துவிடுவார். அறுபது எழுபது லட்சங்கள் என்று வரும்போது தராமல் ஏமாற்றிவிடுவார். இப்படி பல பைனான்ஸியர்களை ஏமாற்றியிருக்கிறார். அப்படி இருபது இருபத்தியைந்து வருடங்களுக்கு முன்பே பல கோடி ரூபாய்க்கு இடங்களை வாங்கிப்போட்டார்.. தனது கல்வி நிலையங்களுக்காக. அந்த நிலங்களின் மதிப்பு அசுர வேகத்தில் உயர்ந்து இன்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாயாக வளர்ந்து நிற்கிறது. பச்சமுத்துவுக்கு பல்லாயிரம் கோடி சேர்ந்ததின் பின்னணியில் இந்த பண – நில மோசடிக்கு முக்கிய பங்கு உண்டு” என்று சொல்லி முடித்தார் பைனான்ஸியர் மோகன் குமார்.