‍கொரோனா பரவலுக்குப் பிந்தைய சமூகம் எப்படி இருக்கும்?

Must read


கொரோனா வைரஸ், உலக மக்களின் மனங்களில் பெரிய மாற்றங்களை உண்டாக்கியுள்ளதாக பலர் கணிப்புகளை வெளியிடுகின்றனர்.
கொரோனாவுக்குப் பிந்தைய உலகில், சமூகம் பெரியளவில் மாற்றமடைந்திருக்கும்! அநாவசிய செலவுகளோ, ஆடம்பரங்களோ இருக்காது. பணத்தின் மதிப்பு குறையும். மனிதர்களுக்கான மதிப்பு அதிகரிக்கும். சுகாதார கட்டமைப்பு வசதிகள் மேம்படும், பல அலுவலகங்கள் காலி செய்யப்பட்டு, வீட்டிலிருந்தே பணிசெய்யும் முறை அதிகரிக்கும். அலுவலகங்கள் இயங்கிய இடங்கள், குடியிருப்புகளாக மாற்றம் பெறும். மக்களின் உதவி மனப்பான்மைப் பெருகுவதோடு, வாழ்க்கைப் பற்றிய அவர்களின் மனநிலையிலும் பெரிய மாற்றங்கள் உண்டாகும் என்பது உள்ளிட்ட பல அம்சங்கள் அவர்களின் கணிப்புகளில் உள்ளடக்கம்.
முதலாம் உலகப்போரும் இரண்டாம் உலகப்போரும் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தால் உண்டானவை. ஆனால், அந்தப் போர்களின் முடிவில் முதலாளித்துவம் வலிமை இழந்ததா அல்லது திருந்தி விட்டதா? என்று கேள்விகள் கேட்டால் எப்படி?
கொரோனாவுக்கும், உலகப் போர்களுக்கும் எதற்காக சம்பந்தமில்லாத முடிச்சுகள்? என்ற ஒரு கேள்வியும் எழலாம். கொரோனாவுக்கும், ஆடம்பர  செலவினங்கள் குறைவதற்கும், பணத்தின் மதிப்பு குறைவதற்கும் என்ன முடிச்சுகள் போடப்படுகிறதோ, அதே முடிச்சுகள்தான் இங்கும் உள்ளன.

இந்த சமூகத்தின் போக்கும், இந்த மக்களின் வாழ்க்கை முறையும் எப்படி அமைய வேண்டுமென்பதை, இந்த மக்களே முடிவுசெய்தால், நாம் மேலே சொன்ன கணிப்புகள் அனைத்தையும் கிட்டத்தட்ட ஒரு நம்பிக்கையின் அடிப்படையில்கூட அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தங்கள் வாழ்க்கை எப்படி அமைய வேண்டுமென்பதை சிறப்பாக சிந்தித்து, தாங்களே முடிவுசெய்யும் வாய்ப்பு இவர்களுக்கு அமையாதபோது, கொரோனாவுக்குப் பிறகு பல விஷயங்கள் அப்படியே மாறிவிடும் என்று கூறுவதெல்லாம் உள்ளக்கிடக்கை என்ற வகையில் வேண்டுமானால் வரலாம்!
முதலில், அலுவலகப் பணியிடங்கள் குறைவது தொடர்பான கணிப்புகளுக்குள் செல்வோம். இணையதளத்தில் மேற்கொள்ளப்படும் எந்தப் பணியையுமே, வீட்டிலிருந்தே சம்பந்தப்பட்ட ஊழியர்கள் செய்யலாம் என்பது தொழில் நிறுவனங்களுக்குத் தெரியாத ஒரு அதிசயமான விஷயமெல்லாம் கிடையாது! அவுட்சோர்ஸிங் முறையில், எப்போதும் ஒரு குறிப்பிட்ட சதவிகித அளவிற்கான வேலைகள் கொடுக்கப்பட்டே வருகின்றன.
ஆனால், அனைத்துப் பணிகளையுமே அப்படி விட்டுவிடுவதில், தொழில் நிறுவனங்களுக்கு பல சிக்கல்கள் உள்ளன. அனைவருமே வீட்டிலிருந்து பணி செய்கையில், அவர்களை ஒருங்கிணைப்பது அவ்வளவு எளிதான காரியமுமல்ல! இதனால், பல நிறுவனங்களுக்கு தேவையற்ற கால விரயம் ஏற்படும். மேலும், பலரும் விரும்புவதைப் போன்று, இதுபோன்ற அவுட்சோர்ஸிங் முறைகளில் தங்களின் அதிகார தோரணையை அழுத்தமாக வெளிப்படுத்த முடியாதது உள்ளிட்ட பல்வேறு காரணிகள் உள்ளன.
எனவே, கொரோனா காலத்திற்குப் பிறகு, பல அலுவலக இடங்கள் காலியாகி, குடியிருப்புகளாக மாற்றமடையும் என்பதற்கெல்லாம், சாத்தியங்கள் மிகவும் குறைவு.
அடுத்ததாக, பணத்திற்கான மதிப்பு, ஆடம்பரம் & வீண்செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து உள்ளே வரலாம்.

முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தால் உண்டான இரண்டாவது மிகப்பெரிய போர் 1945ம் ஆண்டு முடிவடைந்த பிறகு, நேரடி காலனி ஏகாதிபத்தியம் என்ற நிலை படிப்படியாக குறைந்து, ஒரு கட்டத்தில் இல்லாமல் போனது என்பது சாதாரண வரலாறுதான்! ஆனால், காலனி ஏகாதிபத்தியம் என்ற நிலையிலிருந்து முதலாளித்துவ ஆதிக்கங்கள் வேறு எந்தெந்த வடிவங்களை எடுத்தன என்பதையெல்லாம் நுணுக்கமாக விவரித்தால் இங்கே அதிக இடம் வேண்டும்.
வேளாண்மை & மருத்துவம் தொடங்கி, பல்வேறு துறைகளில் ஏற்பட்ட பல விரும்பத்தகாத மாற்றங்கள், மனித சமூகத்தை வேறொரு நுகர்வு கலாச்சாரத்திற்கு இட்டுச் சென்று, அவர்களில் கணிசமானோரை நுகர்வு அடிமைகளாக மாற்றியது, பொருளாதார தாராளமயமாக்கல், வரம்பற்ற இயற்கை வளச் சுரண்டல், தேவைக்கதிகமான பொருள் உற்பத்தி, வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளின் மீதான மறைமுக காலனியாதிக்கம் உள்ளிட்ட முதலாளித்துவத்தின் முகங்கள் பல்வேறு வடிவங்களிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது மற்றும் அது எல்லை மீறியும் சென்று கொண்டுள்ளது.
எனவே, கொரோனாவுக்குப் பிந்தைய மனித சமூகம், எப்படி இருக்க வேண்டுமென்பதையும் முதலாளித்துவமே இறுதி முடிவு செய்யும் என்ற நிலை உள்ளது. தேவைக்கதிகமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்க வேண்டுமெனில், மிதமிஞ்சிய நுகர்வு கலாச்சாரம் கட்டிக்காக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது!
பொதுவாக, நேரடி காலனியாதிக்க உலகிலும் சரி, இன்றைய மறைமுக காலனியாதிக்க உலகிலும் சரி, மக்கள் இப்படித்தான் வாழ வேண்டுமென்ற திட்டமோ, முடிவோ மக்களின் கைகளில் இருப்பதில்லை. முதலாளிகளின் முடிவுகள், அரசுகளின் மூலம் மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
மக்களின் பக்குவமும் முதிர்ச்சியும் சிந்தனா நிலையும், எந்தளவில் வைக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதிலும் தனி கவனம் செலுத்தப்படுகிறது!
நமது வாழ்க்கைச் சூழலில், நம் மக்கள், திடீரென ஏற்படும் கஷ்ட-நஷ்டங்களை எளிதில் கடந்துபோகும் வகையில் மன ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்பதையும் நாம் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும்.

கடந்த 2006ம் ஆண்டு மும்பையின் புறநகர் ரயில்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்து நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து, மும்பையின் சராசரி வாழ்க்கை அடுத்து எப்போது மீண்டுவரும்? புலம்பெயர்ந்த மக்களின் அடுத்தக்கட்ட வாழ்க்கை? அவர்கள் மீண்டும் சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்களா? என்றெல்லாம் விவாதங்கள் கொடிகட்டிப் பறக்க, அடுத்த சில நாட்களிலேயே துவக்கப்பட்ட புறநகர் ரயில் போக்குவரத்தில், எதுவுமே நடக்காததுபோல், வழக்கம்போலவே நெரிசலில் தொத்திக்கொண்டு பயணம் செய்து தங்களின் முந்தைய வாழ்க்கையைத் துவங்கினர் அந்த மக்கள். அவர்களுக்கு அவ்வளவு பெரிய பயங்கரத்திலிருந்து மீண்டுவர, வெகுசில நாட்கள்கூட அதிகமானதாக இருந்தது.
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையின் வெள்ளப்பெருக்கு, பல பகுதிகளை மூழ்கடித்தது. போக்குவரத்து அனைத்தும் தடைப்பட்டு, இனி சென்னையின் நிலை என்ன? அதை நம்பி வந்த லட்சக்கணக்கான மக்களின் எதிர்காலம் என்ன? என்றெல்லாம் வழக்கம்போல் வாதங்கள் வரிசைக் கட்டின.
சில மீடியாக்களோ, இன்னும் சில படிகள் மேலேறி, ‘சென்னையே வேண்டாம்… ஆளை விடுங்கப்பா..! என்று மக்கள் தங்களின் சொந்த ஊர்களை நோக்கி நடையைக் கட்டுகின்றனர்’ என்றெல்லாம்கூட எழுதின.

ஆனால், சில நாட்கள்தான், வெள்ளம் வடிந்தது; வெள்ளமெல்லாம் ஒரு விஷயமா? என்பதுபோல் தங்களின் வாழ்க்கைப் பயணத்தை வழக்கம்போல் மீண்டும் துவக்கினர் சென்னை மக்கள். யாரும் எங்கும் ஓடிவிடவில்லை!
(உதாரணத்திற்காக, இரண்டு சம்பவங்களை மட்டும் சொன்னேன். ஆனால், இன்னும் நிறைய இருக்கின்றன).
ஒரு சத்யராஜ் – வடிவேலு திரைப்படத்தில், சாம்பாரில் கரப்பான் பூச்சி விழுந்துவிட்டதால், ரகளை செய்து திருமணத்தை நிறுத்துமாறு, பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நபர் ஒருவரிடம் வடிவேலு சொல்ல, அவர் பக்கத்திலிருந்து ஒரு பெருச்சாளியை எடுத்துக் காண்பித்து, சாம்பாரில் ஏற்கனவே அது இருந்தது என்றும், அதையே தள்ளிவைத்துவிட்டு தூர்வாரிக் கொண்டிருப்பதாக கூறுவார். மேலும், அவர் முன்பு சென்ற ஒரு திருமணத்தில் சாம்பாரில் பூனை விழுந்ததையே அலட்சியம் செய்து, சாப்பிட்டு விட்டு வந்ததாகவும் சொல்வார்!
இப்படித்தான் நமது பாவப்பட்ட மக்களின் மனநிலையும்! குண்டு வெடித்தால் என்ன? வெள்ளம் வந்தால் என்ன? வைரஸ் பரவினால் என்ன..!
நிச்சயமாக, இது அவர்களை குறைசொல்லும் வாக்கியங்கள் அல்ல. அவர்களின் நிலை அப்படி! அவர்கள் அப்படித்தான் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். மும்பையில் குண்டு வெடித்துவிட்டது என்று அங்கிருந்து சென்றால், வேறு என்ன செய்வார்கள்? சென்னையில் வெள்ளம் வந்துவிட்டது என்று அங்கிருந்து சென்றால், அதன்பிறகான நிலை?

இப்போதும்கூட, முற்றிலும் திட்டமிடப்படாத தொடர் ஊரடங்கு காரணமாக, ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்தே, தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து, தமது சொந்த மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கும் மக்கள், நிலைமை சற்று சரியானவுடன், மீண்டும் அதே இடங்களுக்கு வரத்தான் செய்வார்கள்! மூன்று வேளையும் உணவுகூட கிடைக்காத காரணத்தால்தான் அவர்கள் புலம்பெயர்ந்தே வந்தார்கள்! எனவே, அவர்களால் மீண்டும் தங்களது சொந்த கிராமங்களிலேயே நீடித்திருக்க முடியாது. அங்கேயொன்றும் நிலைமைகள் புதிதாக மாறிவிடப்போவதில்லை.
இது ஒருபுறம் பிழைப்பிற்கான கட்டாயம் என்றால், பல பத்தாண்டுகளாக கட்டமைக்கப்பட்ட அவர்களின் மனநிலை, ஒரு வைரஸ் தொற்றால் உடனே மாறிவிடுமா? என்றால், நிச்சயமாக இல்லை என்பதுதான் பதில். அப்படி மாறுவதற்கு அவர்கள் அனுமதிக்கப்படவும் மாட்டார்கள்!
ஊரடங்கு நடைமுறையால், கிட்டத்தட்ட 45 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட மதுபான கடைகளின் முன்னே, கிலோ மீட்டர்கள் கணக்கில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நாள் முழுவதும் காத்து நின்றவர்கள்தான் நம் மக்கள்!

ஒரு கட்சியின் ஆட்சியால் 5 ஆண்டுகள் சொல்லொணா அவலங்களை அனுபவித்தாலும், தேர்தல் நேரத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரத்தாலோ அல்லது ஒரு ஓட்டுக்கு கொடுக்கப்படும் சில ஆயிரம் பணத்திற்காகவோ, எதைப் பற்றியும் சிந்திக்காமல், மீண்டும் அதேக் கட்சிக்கே வாக்களிக்கும் வகையில் வார்த்தெடுக்கப்பட்டிருப்பவர்கள்தான் நம் மக்கள்!
கொரோனா தாக்கத்தால், கடைசியாக, எந்த அளவிற்கு இந்தியாவில் பாதிப்பு ஏற்படும் என்பதைப் பற்றி இப்போதே அறுதியிட்டு சொல்லிவிட முடியாதுதான். ஆனால், அப்படியான பாதிப்பிற்கு பிறகு, சமூகம் இப்படியெல்லாம் மாறும் என்று சொல்பவர்களுக்கு அப்படியான ஆசைகள் இருக்கலாம்! அதில் தவறுமில்லை. ஆனால், அப்படியான மாற்றங்களுக்கு நடைமுறை சாத்தியங்கள் மிக மிக குறைவாகவே இருக்கின்றன.
சமூக மாற்றம் என்பது பல்வேறு காரணிகளுடன் பிணைந்துபட்ட ஒன்று. இதில், உற்பத்தி முறைகளில் ஏற்படும் மாற்றம் மிக மிக முக்கியமானது. அந்த மாற்றம் ஆட்சியமைப்புகளையே மாற்றிவிடக்கூடியது; இதுவரை உலக வரலாற்றில் பலமுறை மாற்றியும் இருக்கிறது. நிலப்பிரபுத்துவம் ஒழிந்து, முதலாளித்துவ சமூக அமைப்பு ஏற்பட்டது, உற்பத்தி முறை மாற்றத்தினால்தான்! எனவே, கொரோனா தொற்று, உற்பத்தி முறைகளை மாற்றும் அளவிற்கு வலிமை வாய்ந்ததா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

உற்பத்தி முறைகளுக்கு அடுத்து பரந்துப்பட்ட பிரச்சாரமும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது! [தமிழகத்தில் முதன்முதலாக பரந்துபட்ட ஒரு வலிமையானப் பேரரசு (சோழப் பேரரசு) அமைவதற்கு, பக்தி இயக்கத்தவர்கள் மக்களிடைய‍ே தொடர் பிரச்சாரம் செய்து அவர்களின் மனதை மாற்ற வேண்டியிருந்தது].
இந்தக் கொரோனா பாதிப்பு மிகப்பெரியதாக இருக்கலாம்; நம்மால் இப்போது அறுதியிட்டு சொல்ல முடியவில்லை என்றாலும்கூட. ஆனால், நம் மக்களின் மன உறுதி மற்றும் அவர்களின் வாழ்க்கைப் பழக்கமானது, அதையும் எளிதாகக் கடந்துவிடக்கூடியதாகவே இருக்கும்.
அந்தப் பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டு, அவர்கள் வழக்கம்போல் தாங்கள் இதற்குமுன்னர் வாழ்ந்த வாழ்வையே தடையின்றி தொடர்வதற்கான அறிகுறிகளே, நம்பிக்கை எனும் கீழ்வானில் எப்போதும் தெரிகின்றன..!
 
மதுரை மாயாண்டி
 

More articles

Latest article