சென்னை: தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குற்ற பின்னணி உடையவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. ஆகையால்  அனைத்து கட்சிகளும் இறுதிக்கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந் நிலையில், வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த விபரத்தை ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தக் கழகம் வெளியிட்டு இருக்கிறது.

தலைமை தேர்தல் ஆணையம் தமது இணையத்தில் வெளியிட்டுள்ள வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் இந்த விபரம் கணக்கிடப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. குற்றப் பின்னணி கொண்டவர்களின் பட்டியல் கட்சி வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

போட்டியிடும் வேட்பாளர்களில் 90 சதவீதம் பேரின் பிரமாண பத்திரத்தை ஆய்வு செய்த போது 13 சதவீதம் பேர் குற்றப்பின்னணி கொண்டவர்களாக உள்ளனர்.18 சதவீதம் பேர் பணக்கார வேட்பாளர்கள் என்பது தெரிய வந்து உள்ளது. அவர்களில் 6 சதவீதம் பேர் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டு, வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் ஏறக்குறைய 90 சதவீதம் வேட்பாளர்களின் பிரமாண பத்திர விபரம் மட்டும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. திமுகவில் 10 பேர், நாம் தமிழர் கட்சியில் 30 பேர், மக்கள் நீதி மய்யம் கட்சியில் 23 பேர், அமமுகவிலல் 59 பேரின் பிரமாண பத்திரங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை. அதற்கான காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

மொத்தம் 466 வேட்பாளர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள். அவர்களில் 350 பேர் முக்கிய கட்சிகளை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அதிக பட்சமாக திமுக கூட்டணியில் 136 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்களான உள்ளனர். அதைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக உள்ளது.

திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் 178 வேட்பாளர்களில் 136 பேர் குற்ற பின்னணி கொண்டவர்கள். பாஜக வேட்பாளர்கள் 20 பேரில் 15 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள். திமுக வேட்பாளர்களில் 50 பேரும், பாஜக.,வில் 8 பேர் கடுமையான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

அதிமுக வேட்பாளர்கள் 191 பேரில் 46 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள். 18 பேர் கடுமையான குற்றங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள். அதிமுக, திமுக ஆகிய கட்சிகளில் ஏறக்குறைய 50 சதவீதம் பேர் பணக்கார வேட்பாளர்கள். 2 கட்சிகளின் வேட்பாளர்களிலும் குறைந்த பட்ச சொத்து மதிப்பு ரூ.1.72 கோடியாகும்.

காங்கிரசில் 71 சதவீதம் பேரும், பாமகவில் 44 சதவீதம் பேரும், தேமுதிக 30 சதவீதம், அமமுக 29 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யம் 15 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சி 14 சதவீதம் பேரும் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.