சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக‘ இன்னும் எவ்வளவு காலம் ஆய்வு செய்யப்படும்? என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
திமுக வெளியிட்ட 2021- ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையில் 375-ம் வாக்குறுதியாக நாடாளுமன்றம் மற்றும் சில மாநிலங்களின் சட்டப்பேரவைகளின் கூட்ட நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதைப் போன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளும் நேரலை செய்யப்படும் என்றும், 376-ஆம் வாக்குறுதியாக தி.மு.க. ஆட்சியில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் குறைந்தது 100 நாட்களுக்கு மேல் நடப்பது உறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இதை செயல்படுத்துவதில், ஆட்சியாளர்கள் மெத்தனம் காட்டி வருகின்றனர். அதிமுக ஆட்சியின்போது திமுக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால், ஆட்சிக்கு வந்த 3ஆண்டுகளாகியும், பேரவை நிகழ்ச்சிகளை இன்னும் நேரடி ஒளிரபப்பு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுதொடர்பாக, சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்தகால விசாரணைகளின்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், அவையில் உறுப்பினர்கள் உரையாற்றும்போது, அதில் இடம்பெறும் நாகரிகமற்ற சொற்களையும், தனிநபர் தாக்குதல்களையும் நீக்க வேண்டியிருப்பதாகவும், அதனால் தான் நேரலை செய்ய முடியவில்லை என்று கூறியது. மேலும், கேள்வி நேரம், கவன ஈர்ப்புத் தீர்மானம் போன்ற நிகழ்ச்சிகள் முழுமையாக நேரலை செய்யப்படுவதாகவும், படிப்படியாக அனைத்து நிகழ்ச்சிகளும் நேரலை செய்யப்படும் என்றும் பேரவை தலைவர் அப்பாவு உறுதியளித்திருப்பதாக கூறினார்.
ஆனால், தி.மு.க. அரசு அமைந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்வதில் முன்னேற்றம் இல்லை.
இது தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் தாக்கல் செய்த பதில் மனுவில்,” 2022 ஜனவரி 6-ந்தேதி முதல், கேள்வி நேரம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 2023 எப்ரல் 12-ந்தேதி முதல் கவன ஈர்ப்பு தீர்மானங்கள், முக்கிய தீர்மானங்களின் விவாதங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து தமிழக சட்டப்பேரவையின் நிகழ்வுகளை படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போதைய விசாரணையின்போதும், இதுதொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தமிழக அரசு கூறியுள்ளது. இந்த வழக்கு நேற்று மீண்டும் (ஏப்ரல் 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்,. ‛‛சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக பல மாநிலங்களிடம் தகவல்கள் கோரப்பட்டன. சில மாநிலங்கள் பதிலளித்துள்ளன. சில மாநிலங்கள் பதிலளிக்கவில்லை. நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து சபாநாயகர் ஆய்வு செய்து வருகிறார். முழுமையாக தகவல்கள் கிடைத்த பின் முடிவு எடுக்கப்படும்’ என விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “எவ்வளவு காலம் ஆய்வு செய்யப்படும்?” என கேள்வி எழுப்பினர். இது குறித்து ஏதேனும் ஒரு இறுதி முடிவு எடுக்க வேண்டும் எனக் கூறி, வழக்கு மீதான விசாரணையை ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.