கோவை மாவட்டம் துடியலூரில் இருந்து உக்ரைனில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் ஏரோ-ஸ்பேஸ் இன்ஜினியரிங் படிக்க சென்ற மாணவர் சாய் நிகேஷ்.
ஐந்தாம் ஆண்டு பொறியியல் பட்ட படிப்பு படித்து வரும் இவர் ராணுவத்தில் சேர பல முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
அமெரிக்க ராணுவத்தில் சேருவது குறித்து சென்னையில் உள்ள அமெரிக்க தகவல் மையத்தில் விசாரணை செய்த இவர் அது மிகவும் சவாலான காரியம் என்பதால் அதனை கைவிட்டு உக்ரைனுக்கு படிக்கச் சென்றார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளுக்குச் சென்று அகதிகளாக தஞ்சமடைந்து வருகிறார்கள்.
இங்கு சிக்கியிருக்கும் மாணவர்களை மீட்க இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசுகள் பெருமுயற்சி எடுத்து வருகின்றன.
இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலைச் சமாளிக்க வெளிநாட்டு தன்னார்வலர்கள் தங்கள் ராணுவத்தில் சேர உக்ரைன் அரசு அழைப்பு விடுத்தது.
இந்திய மாணவரான சாய் நிகேஷ் உக்ரைன் ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு இந்த விவரம் தெரிய வந்ததைத் தொடர்ந்து கோவையில் உள்ள சாய் நிகேஷின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தாக்குதல் தொடங்கியதில் இருந்து தங்கள் மகனை இந்தியாவுக்கு திரும்பிவருமாறு கூறிவந்ததாகவும், தங்கள் விருப்பத்திற்கு மாறாக பல காரணங்களைக் கூறி அவர் அங்கேயே தங்கி வருவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், சில தினங்களுக்கு முன் தனக்கு கேமிங் மென்பொருள் நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் பணி செய்ய வேலை கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
விசாரணைக்காக அதிகாரிகள் வந்தபோது தங்களது மகன் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்திருப்பது தெரியவந்ததை தொடர்ந்து ஏற்கனவே ராணுவத்தில் சேர எடுத்த முயற்சிகள் குறித்து அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
உக்ரைன் ராணுவத்தில் சேர விரும்பும் வெளிநாட்டு தன்னார்வலர்களுக்கு மார்ச் 1 முதல் விசா நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்ததைத் தொடர்ந்து சுமார் 16000 பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
21 வயதாகும் சாய் நிகேஷ் உக்ரைன் ராணுவத்தின் ஜார்ஜியா தேசிய படை பிரிவில் சேர்ந்திருப்பதாக அந்நாட்டு அரசும் இன்று உறுதி செய்துள்ளது.
உக்ரைன் படையுடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபடும் வெளிநாட்டினர் யாரும் போர் கைதிகளாக கருதப்பட மாட்டார்கள் என்று ரஷ்யா ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில் இந்திய மாணவர் ஒருவர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்திருப்பது இந்திய அரசுக்கு பெரும் கவலையளித்துள்ளதோடு எஞ்சியுள்ள இந்திய மாணவர்களை விரைந்து மீட்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை மாணவன்…! மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணை