சென்னை: கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன் என்ற விமானவியல் மாணவர் உக்ரைன் துணை இராணுவத்தில் இணைந்துள்ளது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணை மெற்கொண்டு வருகின்றனர்.  தமிழக மாணவனின் நடவடிக்கையால், தமிழ்நாட்டில் இருந்து உக்ரைன் சென்று மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது  ரஷ்யா 13ஆவது நாளாக தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கிடையில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினரை மீட்கும் நடவடிக்கைக் காக முக்கிய 4 நகரங்களில் நேற்று இரண்டாவது முறையாக ரஷ்ய ராணுவம் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தது. இதையடுத்து, அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியில் இந்திய தூதரகம் ஈடுபட்டு வருகிறது.

ரஷ்யாவை எதிர்த்து போரிட பொதுமக்களும், பிற நாட்டை சேர்ந்தவர்களும் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து போரிடலாம் என்று அந்நாட்டு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு விமானவியல் படிக்க சென்ற கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் சாய்நிகேஷ் என்பவர் உக்ரைன் துணை ராணுவப் படையில்  இணைந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு  முதல் உக்ரைனில் உள்ள கார்கோ  நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருகின்றார். தற்போது 4ம் ஆண்டு படித்து வரும் அவர் உக்ரைன் நாட்டில் உள்ள ஜார்ஜியன் நேசனல் லிஜியன் எனும் துணை இராணுவ பிரிவில் இணைந்துள்ளது இந்திய உளவு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவன் சாய் நிகேஷ் நடவடிக்கை குறித்து து மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாய்நிகேஷ் குறித்து விசாரணை நடத்திய உளவுத்துறை அதிகாரிகள் கோவை துடியலூர் சுப்பிரமணியம் பாளையத்தில் உள்ள அவரது வீட்டை ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஏராளமான ராணுவ வீரர்களின் புகைபடங்கள் வைக்கப்பட்டு இருப்பதை பார்த்துள்ளனர். பெற்றோருடன் தொடர்பில் இருக்கும் சாய்நிகேஷ்  ரவிச்சந்திரன் ஊருக்கு வர விரும்பவில்லை என தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து மத்திய, மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாணவனின் நடவடிக்கை காரணமாக, எதிர்காலத்தில் உக்ரைன் சென்று படிக்க விரும்பும் தமிழக மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.