கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் மலம்புழா பகுதியில் உள்ள குறும்பாச்சி மலையில் மலையேற்றம் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் தவறி விழுந்து மலை இடுக்கில் சிக்கிக்கொண்டார்.
திங்கட்கிழமை மதியம் நடைபெற்ற இந்த சம்பவத்தில் குறும்பாச்சி மலையை ஒட்டிய சேராடு கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான பாபு என்ற இளைஞர் மலை இடுக்கில் சிக்கிக் கொண்டதை அடுத்து அவருடன் வந்த நண்பர்கள் இருவரும் அவரை மீட்க பெரிதும் போராடினர்.
பின்னர் அருகில் உள்ள மலை கிராமத்திற்கு சென்று தகவல் அளித்த அவர்கள் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
பாபு எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் தேடிய அவர்கள் சிறிது நேரம் கழித்து ஒரு இடுக்கில் சிக்கிக்கொண்டிருப்பதை பார்த்தனர். மாலை நேரம் ஆனதால் மீட்கும் முயற்சியை கைவிட்ட அவர்கள், வன விலங்குகள் எதுவும் அந்த பகுதிக்குள் வந்துவிடாமல் இருக்க தீப்பந்தங்களை ஏற்றி வைத்து இரவு முழுவதும் அமர்ந்திருந்தனர்.
காலையில் மீண்டும் தேடும் பணியை துவங்கிய அவர்கள் மலை உச்சியில் இருந்து அங்கு இறங்க எடுத்த முயற்சி பலனளிக்காததை அடுத்து மாவட்ட ஆட்சியர் மூலம் கடலோர காவல் படையின் உதவியை நாடினர்.
ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியை துவங்கிய அவர்கள் அந்த ஹெலிகாப்டர் அங்கு செல்ல முடியாத நிலையில் அந்த முயற்சியை கைவிட்டு ட்ரான் மூலம் அருகில் சென்று படம் பிடித்து வந்தனர்.
இரண்டாவது நாளும் இருள் சூழ ஆரம்பித்த நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் ராணுவத்தின் உதவியை நாடினார். மறுநாள், நேற்று புதன்கிழமை அன்று பெங்களூரு மற்றும் வெலிங்டன் ராணுவ மையங்களில் இருந்து வந்த மலையேறுவதில் திறம்படைத்த ராணுவ வீரர்கள் 45 மணி நேரம் கழித்து பாபுவை மீட்டனர்.
காலை 9:30 மணியளவில் அவர் அருகில் சென்ற ஒரு ராணுவ வீரர் முதலில் அவருக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை வழங்கினார். சிறிது நேரம் ஆசுவாசபடுத்திக்கொள்ள செய்ததோடு, கூச்சலோ கூக்குரலிட்டோ ஆற்றலை இழக்க வேண்டாம் என்று பாபுவுக்கு அறிவுறுத்தினர்.
பின்னர் சுமார் 10:15 மணிக்கு தேவையான பாதுகாப்பு கவசங்களை அளித்து அவரை பத்திரமாக மலை உச்சிக்கு மீட்டுச் சென்றனர்.
அங்கு அவரது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் தன்னை மீட்ட ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
முதலுதவி சிகிச்சைக்குப் பின் அவரை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், இரண்டு நாட்கள் மலையிடுக்கில் சிக்கிக் கொண்ட போதும் தான் எப்படியும் மீட்கப்படுவோம் என்ற அந்த இளைஞரின் மனதைரியத்தை அப்பகுதி மக்கள் வியந்து பாராட்டினர்.