சென்னை,
மணல் சுரங்கத் தொழில் மன்னன் சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப் பட்ட பண விவகாரத்தில் புதிய சிக்கல் கிளம்பி உள்ளது. எஸ் ஆர் எஸ் மைனிங் கம்பெனி என்னும் மணல் சுரங்க நிறுவன உரிமையாளர் சேகர் ரெட்டி, மற்றும் அவர் உறவினர்களிடம் வருமான வரி அதிகாரிகள் சோத்னையிட்டதில் ரூ. 2000 புதிய நோட்டுக்கள் கோடிக்கணக்கான மதிப்பில் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆனால், அந்த பணம் எப்படி கிடைத்து என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. இதுகுறித்து திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சேகர் ரெட்டிக்கு ரிசர்வ் வங்கி துணைபோகிறதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
“ரூபாய் 33.6 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகள் எந்த வங்கியிலிருந்து பெறப்பட்டன என்ற விவரங்களை ரிசர்வ் வங்கி அளிக்க இயலாததால் மணல் மாபியா சேகர் ரெட்டி மீதான வழக்கு காலதாமதம் ஆகிறது என்று சி.பி.ஐ. தெரிவித்திருப்பதாக, வெளிவந்துள்ள செய்திகள் ஆச்சர்யமளிப்பதோடு, அதிர்ச்சியளிப்பதாகவும் இருக்கிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ‘மணல் ஊழலுக்கு’ இந்த சேகர் ரெட்டிதான் பினாமி கதாநாயகன் என்பது தமிழகத்தில் மணல் குவாரிகள் இருக்கும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தியது வருமான வரித்துறை. அதில் 170 கோடி ரூபாய்க்கு மேல் பணமும், 178 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதாக அப்போதே செய்திகள் வெளிவந்து தமிழகத்தை வியப்பில் ஆழ்த்தின
ஆனால், இந்த விசாரணை அடுத்தகட்டத்திற்கு நகராமல் பின்னடைவு ஏற்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யால் சேகர் ரெட்டிக்கு எப்படி புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் கிடைத்தன? அந்த ரூபாய் நோட்டுக்கள் எந்த வங்கியிலிருந்து பெறப்பட்டன? போன்ற முக்கிய அடிப்படைத் தகவல்களை பெற முடியாமல் திணறி நிற்கிறது.
மஹாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதேபோல, கர்நாடகத்திலும், மேற்குவங்கத்திலும் உள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.
ஆனாலும், சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட புதிய 2000 ஆயிரம் நோட்டுக்கள் எந்த வங்கியிலிருந்து வாங்கப்பட்டன என்பதை சி.பி.ஐ.யால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது எவராலும் நம்ப முடியாததாக இருக்கிறது.
சேகர் ரெட்டியின் உயிருக்கு ஆபத்து என்று முன்பு ஒரு சர்ச்சை எழுந்தது. ஆனால், அவரது உயிருக்குக் குறி வைத்தவர் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போது சேகர் ரெட்டி எங்கிருந்து 2000 ரூபாய் நோட்டுக்களைப் பெற்றார் என்பதையும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதோடு, “அந்தத் தகவல் எங்களிடம் இல்லை”, என்று ரிசர்வ் வங்கியே சி.பி.ஐ.க்குத் தெரிவித்திருப்பது, ஒட்டுமொத்த விசாரணையையே முடக்கி வைத்துள்ளது.
ஆகவே, இந்த வழக்கில் மூன்று மாதங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய சி.பி.ஐ., இந்த நெருக்கடியில் சிக்கி ஏனோ அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியாமல் திணருகிறது.
எனவே, இதைப் பயன்படுத்திக் கொண்டு, “தன் மீதுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்”, என்று சேகர் ரெட்டி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார் என்றால், இந்த வழக்கை நீர்த்துப் போக வைக்க அரசியல் பின்புலத்தோடு ரிசர்வ் வங்கியே துணை போகிறதா என்ற கேள்வி எழுகிறது.
ஏற்கனவே, கன்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் திருப்பூரில் பிடிபட்ட வழக்கும், கரூர் அன்புநாதன், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகனராவ், அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி ஆகியோர் மீதெல்லாம் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டுகளும் தூசு படிந்து, உண்மைகள் வெளிவராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
மேலும், மத்திய அரசுக்கு ரூபாய் 250 கோடி வரி இழப்பை ஏற்படுத்திய தடை செய்யப்பட்ட “குட்கா” விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டும் உள்நோக்கத்தோடு முடக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், “சேகர் ரெட்டி விவகாரத்தில் புதிய நோட்டுக்களைக் கொடுத்த வங்கி விவரம் தெரியவில்லை”, “குட்கா விசாரணையில் வருமான வரித்துறையின் அறிக்கையே காணவில்லை”, “570 கோடி ரூபாய் விவகாரத்தில் கன்டெய்னர்கள் போனது தேர்தல் ஆணையத்திற்கும், ரிசர்வ் வங்கிக்கும் தெரியவில்லை”, போன்ற பல விசித்திரமான செய்திகள் தொடர்ந்து வெளிவந்தபடி இருகின்றன.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பும் பின்பும் வருமான வரித்துறை நடத்திய ரெய்டுகள் எல்லாம் தமிழகத்தைப் பொறுத்தவரை இப்படி அந்தரத்தில் தொங்கிக் கொண்டு நிற்கின்றன.
இந்தச் சூழ்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்புகளை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்கட்சிகள், நவம்பர் 8 ஆம் தேதியை ‘கருப்பு தினம்’ என்று அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளன.
இதற்குப் போட்டியாக, ‘கருப்பு பண ஒழிப்பு தினம் கொண்டாடப் போகிறோம்’, என்று நாட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்றைய தினம் அறிவித்திருக்கிறார்.
ஆனால், “தமிழகத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டுகளில் கைப்பற்றப்பட்ட கறுப்புப் பணங்களின் மீதான நடவடிக்கை மட்டும் ஏன் திட்டமிட்டு முடக்கப்படுகிறது?” என்ற கேள்விக்கு எங்கும் பதில் இல்லை.
குறிப்பாக, எந்த வங்கியிலிருந்து சேகர் ரெட்டி புதிய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றார் என்ற அடிப்படை தகவலைக் கூட ரிசர்வ் வங்கியால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், மத்திய அரசின் கறுப்புப் பண ஒழிப்பு என்ற நடவடிக்கை எவ்வளவு மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
ஆகவே, ‘கறுப்புப் பண எதிர்ப்பு தினம்’ கடைப்பிடிக்கும் இந்த சமயத்திலாவது, மணல் மாபியா சேகர் ரெட்டி உள்ளிட்ட தமிழகத்தில் பல அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும், சேகர் ரெட்டிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் எங்கிருந்துக் கிடைத்தன என்ற விவரங்களை ரிசர்வ் வங்கி உடனடியாக சி.பி.ஐ.க்கு அளித்து, சேகர் ரெட்டி மீது வருமான வரித்துறை தெரிவித்த குற்றச்சாட்டுகளின் மீதான நடவடிக்கைகள் நீர்த்து விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.