சென்னை: தமிழ்நாடு அரசின் ஆளுநருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதுதொடர்பாக  முக்கிய கேள்விகளை எழுப்பி, அதற்கு ஆளுநர் தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. அந்த கேள்விகள் விவரம் வெளியாகி உள்ளது.

 

தமிழ்நாடு அரசின்,  12 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதை எதிர்த்து,   தமிழக ஆளுநர்  ஆர்.என். ரவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம்   ஒத்திவைத்துள்ளது,   விசாரணையின்போது,  தமிழ்நாடு அரசின் மசோதா,  ஜனவரி 2020 முதல் நிலுவையில் உள்ளது. மசோதாக்கள் சிறப்பு அமர்வில் மீண்டும் நிறைவேற்றப்பட்டவுடன், மீண்டும் நிறைவேற்றப்பட்ட சில சட்டங்களை மறுபரிசீலனைக்காக குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் எப்படி அனுப்பினார் என்பது உள்பட  பல்வேறு முக்கிய கேள்விகளை எழுப்பி உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம்  கடந்த 10ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில்,  எழுப்பப்பட்டுள்ள கேள்வி விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளனத.

உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்..

  1. தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி, மீண்டும் பெற்ற மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பலாமா?
  2. அனைத்து வித மசோதாக்களையும் குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆனுப்பலாமா?
  3. தனிப்பட்ட அதிகாரம் என்பதன் செயல்பாடு என்ன?
  4. அரசியல் சாசனம் அதை உறுதி செய்கிறதா?
  5. பரிந்துரையின்போது அமைச்சரவை ஆலோசனையை ஆளுநர் கேட்க வேண்டுமா?
  6. தனித்து செயல்படலாமா
  7.  மசோதா மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் எனக் கூற முடியுமா?
  8. குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் மசோதா மீது ஒப்புதல் தருவது அவசியமா? அவசியம் இல்லையா?
  9. அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் 4 நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளதா?
  10. குடியரசுத் தலைவரால் மசோதா நிராகரிக்கப்படும்போது எழும் சூழலை அரசியல் சாசனம் மூலம் கையாள்வது எப்படி?

என பல கேள்விகளை  உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது. இந்த கேள்விகள் மீது தமிழ்நாடு அரசும், ஆளுநர் தரப்பும் ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வ பதில் தர உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதா மீது முடிவெடுக்க வகை செய்யும் அதிகாரம் தொடா்பான அரசமைப்பின் 201-ஆவது விதி, நாடாளுமன்றத்தால் ஒப்புதல் தெரிவிக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வகை செய்யும் குடியரசுத் தலைவரின் அதிகாரம் தொடா்பான அரசமைப்பின் 111-ஆவது விதி தொடா்பாக நீதிபதிகள் விரிவாக ஆராய்ந்து பேசிய நிலையில், தற்போது சில கேள்விகளை எழுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,  கடந்த 2020 -ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா உள்பட 12 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றின் மீது முடிவெடுக்காமல் அவா் தாமதிப்பதாகவும் கூறி, 2023-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடா்ந்தது. இந்த விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் துணைவேந்தா்கள் நியமனத்தில் அவரது தலையீடு அதிகரிப்பதாகக் கூறி ஒரு வழக்கை சமீபத்திலும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்தது குறிப்பிடத்தக்கது.