சென்னை: கைகள் கட்டப்பட்ட ஒருவர், Chair இல்லாமல் எப்படி தூக்கில் தொங்க முடியும்?  என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற திருபுவனம் அஜித்குமார் மரணம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சென்னையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள  “திருமலா” பால் நிறுவனத்தில் மேலாளரின் மரணமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் அஜித்குமார் மரணமா என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“திருமலா” பால் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நவீன் பொலினேனி என்பவர், 45 கோடி ரூபாய் நிறுவனப் பணத்தை கையாடல் செய்ததாக ஏற்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்கு பதியாமல் அவர் விசாரிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்ததாகவும் செய்திகள் வருகின்றன. இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மத்திய குற்றப்பிரிவிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் புழல் பிரிட்டானியா நகரில், நவீன் பொல்லினேனி வீடு கட்டி வரும் இடத்தில் உள்ள குடிசையில், துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்ததாக கூறப்பட்டு அவரது உடல் கைப்பற்றப்பட்டனது. அவரது  கைகள் பின்பக்கம் கட்டப்பட்டு இருந்தன.  அதனால் அவர் எப்படி தூக்கில் தொடங்க முடியும் என்றும் அவர் தூக்கில் தொடங்கிய உயரத்தை தாவி பிடிக்க அங்கு வாய்ப்பு இல்லை. டேபிள் உள்ளிட்ட பொருட்களும் இல்லை. அப்படி இருக்கும்போது, எப்படி துாக்கிட்டு கொண்டார் என, சந்தேகம் எழுகிறது என அவரது உடலை பார்த்த பொதுமக்கள் என பல தரப்பினரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால், அவரது மரணத்தை  புழல் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நவீன் பொலினேனி  மர்ம மரணம் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ‘திருமலா’ பால் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நவீன் பொல்லினேனி என்பவர், 45 கோடி ரூபாய் நிறுவனப் பணத்தை கையாடல் செய்ததாக ஏற்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்கு பதியாமல் அவர் விசாரிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்ததாகவும் செய்திகள் வருகின்றன. AD நவீன் தூக்கில் இருந்த குடிசையில் எந்த சேரும் இல்லை; அவரின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தன என்று செய்திகள் வருகின்றன.

கைகள் கட்டப்பட்ட ஒருவர், சேர் இல்லாமல் எப்படி தூக்கில் தொங்க முடியும்? இந்த வழக்கின் அடிப்படையான கேள்வி – காவல் துறை வழக்கு பதியாமல், எதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டது? அதுவும், கொளத்தூர் துணை ஆணையரே நேரடியாக விசாரித்ததாக சொல்லப்படுகிறது.

இன்னும் அஜித்குமார் மரணத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. என்ன பதில் வைத்துள்ளார் ஸ்டாலின்?

காவல் துறை விசாரணைகள் சந்தேகத்துக்கு உரியதாக மாறி வருவதற்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். நிதி மேலாண்மை பற்றி நான் கேட்ட ஒரு கேள்வியை, கண், காது, மூக்கு வைத்து திசைத் திருப்பி சித்தரிப்பதில் இருந்த முனைப்பு, ஸ்டாலினுக்கோ, அவரின் திமுக அரசுக்கோ, ஒரு முறையாவது சட்டம் – ஒழுங்கைப் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு இருந்ததா?

காவல் துறை நிர்வாகம் செய்யத் தெரியாத முதல்வர், தன் தொகுதி உள்ளடக்கிய காவல் மாவட்டத்தில் நடந்துள்ள இச்சம்பவத்துக்கு என்ன விளக்கம் தரப் போகிறார்?

 ” நவீன் மர்ம மரணம் குறித்து எந்தவித குறுக்கீடும் இல்லாமல் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்; குறிப்பாக காவல் துறை வழக்கு பதியாமல் விசாரணை நடத்தியது குறித்து தீர விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னையில், சந்தேகத்திற்கிடமான முறையில் உடல் கண்டெடுக்கப்பட்ட திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளர் திரு. நவீன் குறித்து, தமிழகக் காவல்துறை ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.

திரு. நவீன் அவர்கள் உடல், கைகள் பின்பக்கம் கட்டப்பட்ட நிலையில், நைலான் கயிற்றில் தொங்கவிடப்பட்டு இருந்திருக்கிறது. உடல் கிடைத்த அறையில், எந்த நாற்காலிகளும் இல்லை. முழுக்க முழுக்க சந்தேகமான முறையில் கிடைத்த உடலை வைத்து, தற்கொலை என்ற உறுதியான முடிவுக்கு எப்படி வந்தது திமுக அரசின் காவல்துறை?

பணம் கையாடல் செய்ததாகக் கூறப்படும் புகார் வந்து இரண்டு வாரங்கள் கடந்தும், காவல்துறை விசாரணை செய்யவில்லை என்றும், திரு. நவீன் அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சலில், காவல்துறை குறித்து எந்தக் குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை என்று காவல்துறை செய்திக் குறிப்பு பெருமையுடன் தெரிவிக்கிறது. இரண்டு வாரங்களாக விசாரணை நடத்தவில்லை என்பதில் காவல்துறைக்கு அசிங்கமில்லையா?

சுமார் ₹40 கோடிக்கும் அதிகமான பணம் கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் புகாரில், இரண்டு வாரங்களாகக் காவல்துறை எந்த விசாரணையும் செய்யாமல் இருந்திருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை. திரு. நவீன் அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சல் திரு. நவீன் அவர்களது கைபேசியிலிருந்து அனுப்பப்பட்டதா அல்லது அவரது கணினியிலிருந்து அனுப்பப்பட்டதா? அந்த மின்னஞ்சலில், திருமலா பால் நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் திரு. நவீனை மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

காவல்துறை முன்பே விசாரித்திருந்தால், இதனை திரு. நவீன் நேரடியாகக் காவல்துறையிடம் தெரிவித்திருக்க மாட்டாரா? திரு.நவீனை, தனியாக விசாரணை செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் திரு. பாண்டியராஜன், அவசர அவசரமாக விடுப்பில் சென்றது ஏன் என்ற கேள்விக்கு, இன்னும் பதில் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், இந்த வழக்கில், துணை ஆணையாளர் திரு. பாண்டியராஜன் அவர்கள் தொடர்பு குறித்து, சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையாளர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளிலா, இரண்டு நாளிலா அல்லது ஒரு வாரத்திலா? எத்தனை நாட்களில் இந்த அறிக்கை வெளியிடப்படும் என்பது குறித்து ஏன் எந்தத் தகவலும் இல்லை?

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர நிகழ்வுக்கும், தற்போது, திரு. நவீன் இறப்புக்கும் பொதுவான சந்தேகம், திமுக அரசின் காவல்துறை மீதுதான். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?

இவ்வாறு கூறி உள்ளனர்.

‘திருமலா பால்’ மேலாளர் மர்ம மரணம்: கொளத்தூர் துணைஆணையர் பணிகளை மேற்கொள்ள தடை – மாதவரம் காவல் ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!