சென்னை: பிரதமரின் இல்லத்திற்கு யாருடைய மொபைல் ‍ஃபோன்களும் அனுமதிக்கப்படாதபோது, பாலிவுட் நடிகர்கள் மட்டும் எப்படி பிரதமருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர் என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார் பிரபல மூத்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

விவசாயிகளையோ, தொழிலாளர்களையோ, இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களையோ எப்போதுமே சந்திக்க விரும்பாதவர் இந்தியப் பிரதமரும், வளர்ச்சியின் நாயகனுமான நரேந்திர மோடி.

காந்தியடிகளின் 150வது பிறந்தநாளைக் கொண்டாடுவது குறித்து கலந்துரையாட, நாட்டின் தூண்களான நடிகர்களை தனது இல்லத்திற்கு அழைத்து சந்தித்தார். அதிகமாக பாலிவுட் நட்சத்திரங்களே கலந்துகொண்ட அந்த நிகழ்வில், எஸ்பிபி உள்ளிட்ட மிக அரிதான தென்னிந்திய சினிமாப் பிரபலங்களேக் கலந்துகொண்டனர்.

பிரதமரின் இல்லத்திற்குள் பார்வையாளர்கள் செல்‍போன்களை எடுத்துச்செல்வதற்கு அனுமதியில்லை. எனவே, அந்நிகழ்வில் கலந்துகொண்ட எஸ்பிபி உள்ளிட்ட பலரும் தங்களின் மொபைல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்து டோக்கன் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், பல பாலிவுட் நடிகர்களிடம் பிரதமர் மோடி இணைந்து செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. எனவே, யாருக்கும் மொபைல்கள் அனுமதிக்கப்படாதபோது, பாலிவுட் நடிகர்கள் மட்டும் எப்படி செல்ஃபி எடுத்துக்கொண்டனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.