டந்த சில வருடங்களாகவே, உடல்தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. அதே நேரம் உடல்தானம் செய்ய விருப்பம் இருந்தாலும் அதற்காக எங்கு எப்படி பதிவு செய்வது என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை.

ஆகவே,, “உடல்தானம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? அதற்கான விதிமுறைகள் என்ன?”  என்பது போன்ற கேள்விகளுடன் மருத்துவ பேராசிரியர் டிக்கால் அவர்களை அணுகினோம்.

எம்.டி. ( சட்டம் சார்ந்த மருத்துவத்துறை) படித்த இவர், சவீதா மருத்துவக்கல்லூரியில் துறைத்தலைவராக பணியாற்றுபவர்.

மருத்துவ பேராசிரியர் டிக்கால்

“உடல்தானம்” குறித்து அவர் patrikai.com  இதழிடம் விரிவாக பேசியதில் இருந்து…

“மருத்துவம் என்பது மனித உடல் பற்றிய படிப்புதானே..? இந்த படிப்பில் முதல் வருடமே உடல் உறுப்பு (அனாடமி) குறித்துதான் மாணவர்கள் படிக்க வேண்டும். அதுதான் மருத்துவ படிப்பின் அடிப்படையாகும்.

உடலமைப்பு, உள் உறுப்புகளின் அமைப்பு, அதன் செயல்பாடு என ஒரு உடலை முழுவதும் திறந்து பார்த்தால் மட்டுமே தெளிவாக கற்க முடியும்.

இந்த காலத்தில், ஒவ்வோர் உறுப்பின் பாகங்களையும் செயல்முறையில் ஓப்பன் செய்து சொல்லித்தரப்படும்.  வலது கை, இடது கை, கால் என ஒவ்வொரு பாகமாக உடற்கூறியல் குறித்து முதலாமாண்டில் கற்றுத்தரப்படும்.

ஆனால் இதற்கான உடல்கள் போதுமான அளவில் கிடைப்பதில்லை. ஒரு மருத்துவக் கல்லூரிகளில் 150 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால், சராசரியாக பத்து உடல்களாவது தேவை.

ஆனால் அந்த அளவுக்கு உடல்கள் கிடைக்காத்தால்  உடலை பதப்படுத்தி பயன்படுத்துவது அல்லது குறைந்த உடல்களை வைத்து நிறைய மாணவர்களுக்கு கற்பிப்பது என்று நடக்கிறது. 

ஆகவே நிறைய பேர் உடல்தானம் செய்ய வேண்டும். அப்போதுதான் உடல்கள் குறித்து மருத்துவ மாணவர்கள் அறிந்து படிக்க முடியும். சிறந்த மருத்துவர்கள் உருவாக முடியும்.

உடல் தானம் செய்ய..

உடல் தானம் செய்ய விரும்புபவர், தங்கள்  பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவக் கல்லூரியை நாட வேண்டும். அங்கு உடல் தானத்திற்கான விண்ணப்பம் கிடைக்கும். அரசு மருத்துவக் கல்லூரி டீனையோ அல்லது உடற்கூறியல் துறைத் தலைவரையோ (Anatomy HOD) அணுகி விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து  அளிக்க வேண்டும்.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதுடன, அதில் தங்களது  புகைப்படத்தை ஒட்டி பெயர், முகவரி, அடையாளங்கள், தொலைபேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிடவேண்டும். பிறகு,  ‘நான் எனது இறப்புக்குப் பிறகு உடலை தானம் செய்ய விரும்புகிறேன்’ என்று எழுதி கையெழுத்திட வேண்டும்.

மேலும், தங்களது மிக நெருங்கிய உறவினர் ஒருவரின் சம்மத்தையும் அதில் குறிப்பிட வேண்டும். பரஸ்பரம் தம்பதியோ அல்லது பிள்ளைகளோ உடன் பிறந்தவர்களோ சம்மதம் தெரிவிக்கலாம்.

உடல் தானம் செய்ததற்கான ரசீது ஒன்று அளிக்கப்படும். அதனை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்படி உடல்தானம் பதிவு செய்ய கட்டணம் எதுவும் கிடையாது.

எல்லோரும் உடல் தானம் செய்துவிட முடியுமா?

சில விதிவிலக்குகள் உண்டு. எச்..ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களும், ஹெபடைடிஸ் பி/சி வைரஸ் தாக்குதல் அடைந்தவர்களும், கேன்சர் போன்ற உயிர்கொல்லி நோய் பாதிப்படைந்தவர்கள், டி.பி. நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள், தொழுநோயால் பாதிப்படந்தவர்கள், போதைப் பழக்க பாதிப்பால் இறந்தவர்களின் உடல்கள் ஏற்கப்படாது.

அதே போல, இயற்கையாக மரணமடைந்தவர்களின் உடல்களே தானமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

 தானம் செய்ய பதிவு செய்தவர் இறந்தால் குடும்பத்தினர் செய்ய வேண்டியது..

உடல் தானம் செய்தவர் இறந்தவுடன், இத்தகவலை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குத் தெரிவிக்க வேண்டும். அவர்களே வந்து உடலை எடுத்துச் செல்வார்கள்.

அல்லது குடும்பத்தினரே சென்று ஒப்படைக்கலாம்.  வேலை நாட்களாக இருந்தால் மருத்துவக் கல்லூரியிலும், விடுமுறை நாட்களாக இருந்தால் அரசு மருத்துவமனையிலும் ஒப்படைக்கலாம்.

அதன் பிறகு என்ன நடக்கும்

தானம் செய்யவரின் உடல் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டதும், எம்பார்மிங் செய்யப்பட்டு பதப்படுத்தப்படும்.  அதன் பிறகு முழுமையாக அவ்வுடன் அரசு சொத்தாகிவிடுகிறது.  குடும்பத்தினர் நினைத்தாலும் திரும்பப் பெற முடியாது.

பிறகு அந்த உடல்…

எம்பார்மிங்செய்யப்படுகிறது அல்லவா..? . உடலிலுள்ள ரத்தத்தை முழுவதும் வெளியேற்றப்பட்டு தொடையில் துளையிட்டு செயற்கை திரவத்தை ஏற்றி உடல் பதப்படுத்தப்படும்.  இப்படி எம்பார்மிங் செய்வதன் மூலம் ஒருவரின் உடல் சுருங்குமே தவிர, எத்தனை நாள் ஆனாலும் உடல் கெடாது.

அடுத்து..

எம்பார்மிங் செய்து பதப்படுத்தப்பட்ட உடல், மருத்துவம் பயிலும் மாணவர்களின் உடற்கூறியல் செயல்முறை கல்விக்கு பயன்படும்.

ஆம்.. அந்த உடல் பல மருத்துவர்களின் அறிவுக்கண் திறக்க உதவியாக இருக்கும்.