மருத்துவமனைகள் கொரோனா நோயாளியோடு போராடுகையில்.. போலி டாக்டர்கள் ‘எங்கள் உயிர் காக்கும் தெய்வங்கள்’ – இது பீகார் அலப்பறை

Must read

 

2018 ம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி இந்தியாவில் 11,082 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளனர், டெல்லியில் 2200 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளார், நாட்டிலேயே மிக குறைவாக பீகாரில் தான் 28,391 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அளவில் மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

மருத்துவ வசதி மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ள பீகார் கொரோனா தொற்று நோயை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.

இங்குள்ள மருத்துவர்களிடம், உதவியாளர்களாகவும், மருந்தாளுநர்களாகவும் பணி புரிபவர்கள் தான் இங்குள்ள மக்களுக்கு வைத்தியம் பார்க்கக்கூடிய நாட்டு மருத்துவர்களாக உள்ளனர்.

பீகார் மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புற பகுதிகளில் இதுபோன்ற போலி மருத்துவர்கள் ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள், சில புள்ளிவிவரங்கள் லட்சக்கணக்கான போலி மருத்துவர்கள் இருப்பதாக கூறுகிறது.

இதுகுறித்து கள நிலவரம் அறிய ‘தி ப்ரிண்ட்’ செய்தி நிறுவனம் முயற்சி மேற்கொண்டது, கிராமப்புறங்களில் நாட்டு மருத்துவர் என்று மரியாதையுடன் அழைக்கப்படும் இவர்களை ‘உயிர்காக்கும் தெய்வங்களாக’ மக்கள் வணங்குவது தெரியவந்தது.

கபூரி குமார்

போஜ்புர் மாவட்டத்தின் அர்ரா பகுதியில் உள்ள ஒரு மருத்துவரிடம் கம்பவுண்டராக வேலை பார்க்கும் கபூரி குமார், மாலை நேரங்களில் தனது பணி முடிந்ததும், அருகில் உள்ள பிம்பலி கிராமத்தில் உள்ள தனது சொந்த கிளினிக்கில் அங்கு வரும் மக்களுக்கு வைத்தியம் பார்க்கிறார்.

மக்களுக்கு இதுபோன்று சேவை செய்வது எனக்கு ஆத்ம திருப்தியை ஏற்படுத்துகிறது என்று கூறும் இவரிடம், காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு என்று வருபவர்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து அனுப்பி வைக்கிறார்.

என்னிடம் வரும் நோயாளிகள் யாருக்காவது கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சிபாஹி

அதேபோல் பிர்பாஹ் கிராமத்தில் மருத்துவம் பார்க்கும் சிபாஹி, தான் எப்பொழுதும் கையில், காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப் போக்கு ஆகியவற்றுக்கு தேவையான மாத்திரைகளை கையோடு வைத்திருப்பேன் அதனால் எங்குவேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் என்னால் வைத்தியம் பார்க்க முடிகிறது என்று கூறுகிறார்.

பீகார் முழுக்க இதுபோல் ஏராளமான போலி டாக்டர்கள் வலம் வந்தபோதும், இங்குள்ள மக்கள் இவர்களை தான் நம்பி இருக்கின்றனர்.

ஊரடங்கு நேரத்தில் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் மூடி விட்டு சென்ற நிலையில் எங்களுக்கு வேறு வழி இல்லை என்று கூறும் இவர்கள், பெரிய மருத்துவமனைகளில் ஊசி போட்டு மக்களை கொல்வதோடு பணத்தையும் பிடிங்கிக்கொள்கின்றனர் என்று குற்றம் சாட்டினர்.

மேலும், மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் குவிந்து கிடப்பதால் எங்களுக்கு அங்கு சென்று வைத்தியம் பார்ப்பதை விட இவர்களிடம் வைத்தியம் பார்த்துக்கொள்வதே சிறந்த வழியாக உள்ளது என்று கூறுகிறார்கள்.

இதுபோன்ற போலி மருத்துவர்கள் காலை முதல் மாலை வரை மருத்துவர்களிடம் அல்லது மருத்துவமனைகளில் உதவியாளர்களாக பணிபுரிந்து விட்டு மாலை நேரங்களில் இதுபோல் வைத்தியம் செய்கின்றனர், ஒரு சிலர் இதுபோல் எந்த அனுபவமும் இல்லாமல் தாங்கள் படித்த விலங்கியல் பாடத்தை அனுபவமாக கொண்டு இந்த தொழிலில் இறங்கியவர்களும் உண்டு.

பல ஆண்டுகளாக இதுபோல் வைத்தியம் பார்த்து வருவதால் அங்குள்ள மக்களுக்கு இவர்கள் நன்கு அறிமுகமானவர்களாக இருக்கிறார்கள்.

கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக இதுபோன்ற நாட்டு மருத்துவர்களை உதவிக்கு ஈடுபடுத்திக்கொள்ள மருத்துவர் ஒருவர் கோரிக்கை வைத்த நிலையில் அந்த மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

More articles

Latest article