நெல்லை,
கத்துவட்டி பிரச்சினை காரணமாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுவரை பல முறை மனு கொடுத்தும், சரியான நடவடிக்கை எடுக்காமல், போலீசாரே கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்து செய்ததால், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நெல்லை கலெக்டர் அலுவலகம் வந்த, இசக்கிமுத்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை கட்டிப்பிடித்து கொண்டு அனைவரது உடலிலும் தீவைத்தார்.
இதில் அவர்கள் 4 பேர் மீதும் தீப்பற்றி எரிந்தது. அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், இன்று இசக்கி மூத்துவும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
கந்துவட்டி மற்றும் ஆட்சியல், போலீஸ் அதிகாரிகளின் அஜாக்கிரதை காரணமாக ஒரு குடும்பமே எரிந்து சாம்பலானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து. இவரது மனைவி சுப்புலெட்சுமி. இவர்களது மகள்கள் மதி சாருண்யா, அக்சயா பரணிகா.
இசக்கிமுத்து நேற்று முன்தினம் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை அழைத்து கொண்டு நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்தார்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொது மக்களிடம் மனுக்கள் வாங்கும் கூட்ட அரங்கின் முன்பு குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார். மனுக்கள் கொடுக்க வந்த ஏராளமானோரும் அங்கு நின்றனர். அந்த நேரத்தில் இசக்கி முத்து பிளாஸ்டிக் கேனில் தான் தயாராக வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலிலும், மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடலிலும் ஊற்றினார்.
பின்னர் இசக்கிமுத்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை கட்டிப்பிடித்து கொண்டு அனைவரது உடலிலும் தீவைத்தார். இதில் அவர்கள் 4 பேர் மீதும் தீப்பற்றி எரிந்தது.
சிறிது நேரத்தில் இசக்கிமுத்து, அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் சுருண்டு கீழே விழுந்தனர். உடல் முழுவதும் கருகி உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த அவர்கள் 4 பேரையும் போலீசார் மீட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
உடல் முழுவதும் பயங்கர தீக்காயம் அடைந்த 4 பேரும் கவலைக்கிடமான சிகிச்சை பெற்றுவந்தனர்.
இதில் தீக்குளித்த 4 பேரில் 3 பேர் உயிர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தனர். தாய் சுப்புலட்சுமி, மகள்கள் மதி சாருண்யா, அக்சயா பரணிகா. ஆகியோர் உயிர் இழந்தனர். மூவர் உயிரிழந்த நிலையில், இசக்கி முத்துக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.