நன்றி : இந்தியா டுடே

டில்லி

ற்போது தலைமறைவாக உள்ள ஹனி பிரீத் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.

பலாத்கார வழக்கில் சாமியார் ராம்ரஹீம் 20 வருடங்கள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்.  அதைத் தொடர்ந்து கடும் வன்முறை சம்பவங்கள் நடந்து பலர் மரணம் அடைந்தனர்.  ஏராளமான  பொதுச்சொத்துக்களும் பாழாகின.  இந்த கலவரத்தை தூண்டியதாக சாமியாரின் வளர்ப்பு மகள் என சொல்லப்படும் ஹனி பிரீத் போலீசாரில் தேடப்பட்டு வருகிறார்.  தலைமறைவாக உள்ள ஹனி சமீபத்தில் இந்தியா டுடேவுக்கு பேட்டி அளித்துள்ளதாக அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பேட்டியின் விவரம் வருமாறு

கேள்வி : இந்த பிரச்னைகள் பற்றி நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

ஹனி : மீடியாக்களால் சொல்லப்படும் என்னப்பற்றிய செய்திகள் யாவும் தவறானவை.  என்னை ஒரு துரோகி என்றும் வன்முறையாளர் எனவும் கூறுகின்றனர்.  ஆனால் நான் அப்படிப்பட்டவள் அல்ல.  கோர்ட்டின் அனுமதியுடன் தான் நான் பாபாவுடன் இருந்தேன்.

கே : நீங்கள் தான் கலவரத்தை தூண்டி விட்டு நடத்தியதாக கூறிகிறார்கள். உங்கள் கருத்து என்ன?

ஹ : ஒரு பெண் அத்தனை பெரிய படையின் நடுவே இவ்வாறு ஒரு கலவரத்தை எப்படி திட்டமிட முடியும்? என் மேல் சொல்லும் குற்றங்களுக்கு ஏதாவது சாட்சி உள்ளதா?  நான் குற்றமற்றவள்.  கலவர நேரத்தில் நான் வெளியே கூட வரவில்லை.

கே: நீங்கள் ஒரு வில்லியாக சித்தரிக்கப் பட்டுள்ளீர்கள்.  அது ஏன்?

ஹ : மக்கள் நடந்த அனைத்தையும் கவனித்துக் கொண்டு வருகிறார்கள்.  நான் குற்றமற்றவள்.  நான் மகளாக எனது கடமையை செய்கிறேன்.  நான் யாரிடமும் எதுவும் பேசவில்லை.  அப்படி இருக்க நான் எப்படி கலவரத்தை தூண்டி விடுவதாக சொன்னார்கள் என எனக்கு தெரியவில்லை. உண்மையில் நான் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறேன்.  நான் எது பற்றியும் சிந்திக்க இயலாத நிலையில் உள்ளேன்

கே : உங்களுக்கும் குருஜிக்கும் உள்ள உறவுமுறை பற்றி…?

ஹ : ஒரு தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவை எதற்கு கொச்சைப் படுத்துகிறார்கள் என தெரியவில்லை.  மீடியாதான் என்னை அசிங்கப் படுத்தி விட்டது.  ஒரு தந்தை தன் மகளின் கையைப் பிடிப்பது தவறா?  இல்லை அந்த மகள் தந்தையிடம் அன்பு வைப்பது தவறா?

கே: உங்கள் தந்தையின் ஆசிரமத்தில் நடந்த பாலியல் குற்றங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

ஹ : ஒரு லெட்டரை வைத்து ஒருவரைக் குற்றவாளியாக்குவது தவறு.  என்னைப் பொறுத்தவரை என் தந்தை குற்றமற்றவர்.  ஒரு அப்பாவி. ஒரு மகள் தன் தந்தையை புரிந்துக் கொண்ட அளவுக்கு மற்றவர்கள் புரிந்துக் கொள்ள மாட்டார்கள்.  விரைவில் என் தந்தை குற்றமற்றாவர் என்பது நிரூபிக்கப்படும்.

கே: இத்தனை நாள் எங்கிருந்தீர்கள்? எப்போது சரண் அடைவீர்கள்?

ஹ : எனக்கு என் தந்தை சிறை சென்றதும் நான் என்ன செய்வது என்றே புரியாத ஒரு மனக்குழப்பத்தில் இருந்தேன்.  எப்படியோ சமாளித்து டில்லி வந்து சேர்ந்தேன்.  விரைவில் பஞ்சாப்-அரியான நீதிமன்றத்துக்கு செல்ல இருக்கிறேன்.  சரண் அடைவது பற்றி சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டுள்ளேன்.  அதன் படி நடந்துக் கொள்வேன்.

கே : நீங்கள் பொது மக்களுக்கு அளிக்க விரும்பும் செய்தி என்ன?

ஹ : நானும் என் தந்தையும் குற்றமற்றவர்கள்.  அப்பாவிகள்.  விரைவில் உண்மை வெளிவரும்.  எனக்கும் என் தந்தைக்கும் உள்ள உறவுமுறை புனிதமானது.  அதை கொச்சைப்படுத்தி வரும் செய்திகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அந்த பேட்டி பற்றி செய்தி வெளியாகி உள்ளது.

[youtube https://www.youtube.com/watch?v=a4H8bwcZArQ]