டெல்லி: தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி,  தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று பிற்பகல் சந்தித்து பேசினர். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவை தெரிவிப்பதாக உள்துறை அமைச்சர் கூறினார் என்று தெரிவித்தார்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்துக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தி, தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயற்சித்துவந்தது.

ஆனால், 3 முறை முயற்சித்தும் அனுமதி கிடைக்கவில்லை. இதுகடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து, ஜனவரி 17ந்தேத, தமிழக அனைத்து கட்சி குழுவை அமித்ஷா சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக  அறிவிப்பு வெளியானது.

இதனை தொடர்ந்து டி.ஆர்.பாலு தலைமையில்  டில்லி சென்ற அனைத்து கட்சி குழுவினர் இன்று பிற்பகல் உள்துறை அமித்ஷாவை சந்தித்து பேசினர். அப்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன் இது தொடர்பாக மனுவையும் அளித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த,  தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு கூறுகையில், கடந்த 2007 ஆம் ஆண்டு நீட் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிரான இதேபோன்ற மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஏற்கனவே தனது ஒப்புதலை அளித்துள்ளார் என்று நாங்கள் உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்தோம். அத்துடன்,  தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து உடனடியாக விலக்கு அளிக்க வலியுறுத்தி மனு அளித்தோம்.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவை தெரிவிப்பதாக உள்துறை அமைச்சர்  அமித்ஷா தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.