சென்னை,

ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் உடல் சென்னை கொண்டுவரப்பட்டது.

விமான நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி, துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

ராஜஸ்தானில்  கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியின் உடல் காலை 8.40 மணி அளவில் ராஜஸ்தானில் இருந்து  தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. மதியம் 12.30 மணி அளவில் சென்னை விமானநிலையம் வந்தடைந்தது.

உடலை சென்னை போலீசார் பெற்று, விமான நிலையத்தில் அஞ்சலிக்காக ஒதுக்கப்பட்ட மேடையில் வைத்தனர். அப்போது போலீசார் சோகமான இசையுடன் அஞ்சலி செலுத்தினர்.

பெரிய பாண்டியன் உடல் இந்திய கொடி போர்த்தப்பட்டு, மலர்களால்  அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்டது. அந்த மேடையில், ஆய்வாளர் பெரிய பாண்டியனின் புகைப்படமும் வைக்கப்பட்டிருந்தது.

பெரியபாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கறுப்பு பேட்ஜூடன் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் விமான நிலையம் வந்திருந்தனர்.

சோகமயமான  பேண்டு வாத்தியம் இசைத்து காவல்துறை மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

மதியம்  சுமார் 1 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பெரிய பாண்டியன் உடலுழக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தெடர்ந்து துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமச்சர் பாண்டியராஜன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தொடர் காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் வீர வணக்கம் செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து காவல்துறை சார்பாக  இசை அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து அவரது உடலுக்கு  உறவினர்கள், மற்றும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அஞ்சலிக்குப் பின்னர் இன்று மாலை  விமானம் மூலம் மதுரை கொண்டு செல்லபட்டு, அங்கிருந்து  சாலை மார்க்கமாக அவரது சொந்த ஊரான  நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள சாலைப் புதுருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

அங்கு இரவு  அரசு மரியாதையுடன்  அடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.