சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதையொட்டி இவ் வழக்கின் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக வரவேண்டும் என்பதற்காக  அதிமுகவினர் மீண்டும் யாகம் நடத்த ஆரம்பித்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
ஏற்கெனவே கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு நடைபெற்ற போது  கோவில்களில் யாக பூஜைகள், அன்னதானங்கள் என்று ஜெயலலிதா விடுதலைக்காக அ.தி.மு.க.வினர் செய்தனர். அதே போல தற்போதும் யாகங்கள், பூஜைகள் நடத்தி வருகிறார்கள்.
சென்னை நீலாங்கரையில் உள்ள திருநீலகண்டேஸ்வரர் கோவில் மிக பிரபலமானது.  இங்கு சுவாமியும் அம்பாளும் ஒரே கர்ப்பகிரகத்தில் வீற்றிருக்கும் சிறப்பான ஒன்று. இந்தக் கோவிலில்  நேற்று (ஞாயிறு)  காலை ஜெயலலிதா பெயரில் மகா ருத்ரஹோமம் அதிமுகவினர் சார்பில் நடைபெற்றது.
download
சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளரும், சென்னை மாநகராட்சியின் கணக்கு தணிக்கை நிலைக்குழு தலைவருமான எம்.சி.முனுசாமி தலைமையில் இந்த யாகம் நடந்தது. கோவில் குருக்கள் சிவஸ்ரீ சுரேஷ் சிவாச்சாரியார், இந்த யாக பூஜையை நடத்தினார். வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு பொருட்கள் ஹோமகுண்டத்தில் போடப்பட்டு யாகம் நடந்தது.
இறுதியில்  திருநீலகண்டேஸ்வரர் சன்னதியில் சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது.
“இங்கு மகா ருத்ரஹோமம் செய்தால் எல்லா பிரச்சினைகளும் தீரும். குறிப்பாக ஆரோக்கியமாக தீர்க்க ஆயுளுடன் வாழலாம்”  என்று யாகம் நடத்திய சிவாச்சாரியார் தெரிவித்தார்.
“சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த வழக்கில் இருந்து விடுதலையாகவும், அம்மா இறைவன் அருளோடு நீடுழி வாழ இறைவனை வேண்டி இந்த திருநீலகண்டேஸ்வரர் ஆலயத்தில் யாகம் நடத்தி அன்னதானம் வழங்கினோம்” என்று அதிமுகவினர் கூறினர்.