கட்சிப் பதவிகள் தேர்தல் மூலமே தேர்வு செய்யப்பட வேண்டும்! காங்கிரஸ் தலைமைக்கு சசிதரூர் வலியுறுத்தல்

Must read

டில்லி:

காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைத்துவிதமான  பதவிகளுக்கும், தேர்தல் மூலமே தேர்வு நடைபெற வேண்டும் என்று , முன்னாள் அமைச்சரும், கேரள மாநில காங்கிரஸ் எம்.பி.யுமான  சசி தரூர் கோரிக்கை விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி கடந்த மே மாதம் 25-ந் தேதி விலகினார். ராகுல் பதவி விலகி 2 மாதங்கள்  முடிவடைந்துள்ள நிலையில்,  இன்னும் காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் நியமிக்கப்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது. காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களே தலைவர்களாக இருக்க வேண்டும் என்று தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில்,  ராகுல், பிரியங்கா போன்றோர் தலைவர் பதவி ஏற்க முன்வராத நிலையில், தலைவர் நியமனம் தாமதமாகி வருகிறது. மேலும் முக்கிய தலைவர்கள் 7 பேர் பெயரும் பரிசீலினையில் உள்ளது.

இந்த நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் எம்.பி. காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்து முன்னேற, கட்சியின் அனைத்துப் பதவிகளும் தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சசிதரூர்,     காங்கிரஸ் கட்சியின் தலைமைப்பீடம் தெளிவற்று இருக்கிறது என்பது நிச்சயம் உண்மைதான். இது காங்கிரஸ் தொண்டர்களையும், அனுதாபிகளையும் பாதிக்கக்கூடும் என்றவர், கட்சியில்  முக்கிய முடிவுகள் எடுப்பதற்கும், அதிகாரம் செலுத்துவதற்கும், உத்வேகம் அளிக்கவும், ஒருங்கிணைந்து செல்லவும், முன்னோக்கி நடைபோடவும் ஒரு தலைவரை இழந்துள்ளனர்என்றார்.

எனவே, காங்கிரஸ் காரியக் கமிட்டி குழு, கட்சிக்கு ஒரு இடைக்கால தலைவரை அறிவிக்க வேண்டும். அடுத்து காரியக்குழு கலைக்கப்பட வேண்டும். அதன் பின்னர் கட்சிப்பதவிகளுக்கு, காரியக்குழு பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும். இது ஒரு முன்னோக்கிய வழி.

புதிய தலைவர் முற்றிலும் அமைப்பு ரீதியிலான திறன் படைத்தவர் என்கிறபோது, அவர் கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கவும், கட்சியின் அஸ்திவாரத்தை பலப்படுத்தவும் முடியும். அவ ர்களால் கட்சிக்கு ஆதரவாக புதிய வாக்காளர்களை கொண்டு வந்து சேர்க்கவும் முடியும் என்று கூறினார்.

மேலும், கட்சியின்  தலைவர் கவர்ந்து இழுக்கிற செல்வாக்கு உள்ள நபராக இருந்தும், அதே நேரம் அமைப்பு ரீதியிலான திறன் குறைவாகத்தான் பெற்றவர் என்றால், அவர் நேரடியாக தனிப்பட்ட முறையில் மக்களின் ஆதரவைக் கோர முடியும். ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, அவர்கள் தங்களுக்கு உரிய கவர்ந்திழுக்கிற திறனை ஓட்டுகளாக மாற்ற வேண்டும். அவர்கள் இதைச் செய்து முடிப்பதற்கு, தொண்டர்களின் ஆதரவை முழுமையாக பெற முடியாது.

இந்த சூழ்நிலைகளில், ஒரு இளம் தலைவர், இதை சிறப்பாக செய்து முடிக்க முடியும் என நம்புவதற்கு இடம் இருக்கிறது. அந்த வகையில் பிரியங்கா கட்சியை வழிநடத்துவதற்கு பொருத்தமான தலைவராக இருப்பாரா என்று கேட்கிறீர்கள். அவருக்கு இயற்கையாக கவர்ந்திழுக்கிற திறன் இருக்கிறது. அதுதான் அவரை அவரது பாட்டி இந்திரா காந்தியுடன் பலரையும் ஒப்பிட வைக்கிறது. அவர் தொண்டர்களையும் ஊக்குவிக்க முடியும். அதேபோன்று வாக்காளர்களையும் ஊக்குவிக்க இயலும்.  பிரியங்காவுக்கு அமைப்பு ரீதியிலான அனுபவமும் இருக்கிறது. கட்சியின் மையத்தில் ஒரு செல்வாக்கு மிக்க நபராகவும் இருக்கிறார்.

உத்தரபிரதேசத்தில் தேர்தல் கள அனுபவமும் பெற்றிருக்கிறார். ஆனால் அதே நேரம், தங்களது குடும்பத்தில் இருந்து இனி யாரும் தலைவர்களாக வரக்கூடாது என்று ராகுல் காந்தி கூறி விட்டதால், பிரியங்காவுக்கான வாய்ப்பு தகர்ந்து போகிறது.

கட்சித்தலைமையை வழிநடத்த எனக்கு விருப்பம் இருக்கிறதா, தலைமைப்பதவிக்கு போட்டி யிடுவேனா என கேட்கிறீர்கள். அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நான் கருதவில்லை என்பதை நேர்மையாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அமைப்பு ரீதியில் நான் புதியவன். கட்சியில் ஒரு பத்தாண்டு காலத்துக்கு சற்று அதிகமான காலம்தான் இருந்து வருகிறேன். கட்சியில் மிக நீண்ட காலம் இருந்தவர்கள் இருக்கிறார்கள். பொதுச்செயலாளர் போன்ற பதவியை நான் கட்சியில் வகித்தது கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிதரூர் கோரிக்கை கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article