சென்னை: தமிழ்நாடு கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அறநிலையத்துறை அறிவித்துள்ள  விதிகள் செல்லும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், எந்தெந்த கோவில்கள் எந்தெந்த ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன என்பதைக் கண்டறிய 5பேர் கொண்ட குழு நியமிக்க உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பணி புதிய விதிகள் 2020-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. அதில், 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், தனி நபர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் கடந்த இரு ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபரில் இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து இந்த வழக்கு  நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், கோவில்களுக்குப் பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், தக்கார்கள் மூலம் அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது என்றும் அறங்காவலர்களுக்கு மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க அதிகாரம் உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என ஆகம விதிகள் உள்ள நிலையில், அதை மீறி அர்ச்சகர் பயிற்சியை முடித்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்போம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அப்போது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  கடந்த 2021 ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை பின்பற்றி,  கோவில்களில் காலியாக உள்ள அர்ச்சகர், ஓதுவார்கள், பட்டர்கள் மற்றும் பிற பணியாளர்கள் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கோவில் செயல் அலுவலர்கள் மூலம் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து அர்ச்சகர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அர்ச்சகர்களை நியமிப்பதற்கான தகுதிகள் குறித்து உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்து, அதன் பரிந்துரையின் அடிப்படையிலேயே ஒரு வருடப் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை எனவும், பாடசாலையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு இணையாகவே கருதப்படுகிறார்கள் எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.  ஹ

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரச, ஆகம விதிகள் படித்தவர்கள் அர்ச்சகர் ஆகலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் எனவும், ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டதுடன், எந்தெந்த கோவில்கள் எந்தெந்த ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன என்பதைக் கண்டறிய 5பேர் கொண்ட குழு நியமிக்க உத்தரவிட்டு அர்ச்சகர்கள் நியமன விதிகளை எதிர்த்த வழக்குகள் முடித்துவைக்கப்பட்டது.