பெற்றோர் ஒப்புதலுடன் மதங்களைக் கடந்து திருமணம் ‘லவ் ஜிகாத்’ என்று இந்துமத அமைப்புகள் எதிர்ப்பு
மைசூரில் இஸ்லாமிய  இளைஞர் ஒருவருக்கு தங்கள் மகளை திருமணம் செய்து வைக்க இந்து மதம் குடும்பம் முன்வந்துள்ளதற்கு அங்குள்ள இந்துமத அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இதனை ‘லவ் ஜிஹாத்’  என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மைசூருவில் உள்ள அசோக் நகர்  பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருபவர் அஷீதா. 24 வயதான இப்பெண், எம்பிஏ படித்துள்ளார். இவரை கடந்த 12 ஆண்டுகளாக ஷகீல் என்ற இஸ்லாமிய இளைஞர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.  இவரும் எம்பிஏ படித்துள்ளார்.
LoveJihad
இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இவர்களின் திருமணம்  மைசூருவில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திரும்ணத்திற்கு அங்குள்ள இந்துமத அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெர்வித்துள்ளன. அப்பகுதியின் பிஜேபி தலைவர்களான சி டி மஞ்சுநாத்,  சித்தராஜ்கவுடே மற்றும் பஜ்ரங் தள் தலைவர் மஞ்சுநாத் உட்பட பலரும் இத்திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள்  அஷீதா வீட்டிற்கு வெளியே நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும்  அவர்கள் இருவரும் உண்மையான காதல் மட்டும் செய்தால் பிரச்சினை இல்லை. அவ்வாறு இல்லாமல் இஸ்லாமிய மத  நடைமுறைகள் மற்றும் திருக்குர்-ஆன் வாசிப்பு போன்ற இஸ்லாமிய மதம் சார்ந்த பயிற்சிகள் அப்பெண்ணூக்கு அளிக்கப்படுவது  ஏன்? என கேள்வி எழுப்பினர்.    அங்குவிரைந்து வந்த காவல் துறையினர் எதிர்ப்பாளர்களை அங்கிருந்த கலைந்து செல்ல உத்தரவிட்டனர்.
லவ் ஜிஹாத் என்பதை தென்னிந்தியாவில் உள்ள இந்து அமைப்புகள் வரையறை செய்து அண்மைக்காலமாக பிரசாரம் செய்து வருகின்றன. இந்து பெண்களை, இஸ்லாமியர்கள் காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து இஸ்லாமுக்கு மாற்றுவதையே லவ் ஜிஹாத் என்று இந்து அமைப்புகள் கூறி வருகின்றன.
பெண்ணின் தந்தையான டாக்டர் நரேந்திர பாபு, தனது மகளை தன்னுடைய நீண்ட கால நண்பரின்  மகன்தான் காதலித்து வருகிறார். இதில் எங்கள் இரு குடும்பத்துக்கும் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. இரண்டு குடும்பங்களுமே தங்கள் விருப்பத்தையும், மரியாதையையும் உணர்வுகளையும் அறிந்து கொண்டவர்கள். இந்த அடிப்படையில்தான் இந்த திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்துமத அமைப்பினர் கூறும் ‘லவ் ஜிஹாத்’ என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளமுடியாது. இருவீட்டாரின் பூரண சம்மத்த்துடன்தான் இந்தத் திருமணம் நடைபெற உள்ளது என   அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதுபற்றி அஷீதா கூறியதாவது:-
“இது என் சொந்த விஷயம். இதில் வெளியில் உள்ளவர்கள் தலையிட எந்த உரிமையும் இல்லை. எங்கள் இரு குடும்ப ஒப்புதலுடன் தான் இந்த திருமணம் நடைபெற உள்ளது. இதில் ஏன் மற்றவர்கள் தலையிடவேண்டும்?.. நான்  இந்து மதம் சார்ந்தவள். நான் அதே இந்து மதம் சார்ந்த ஒருவரை திருமணம் செய்தால்கூட அக்குடும்பத்தின் பழக்க வழக்கங்கள் ,மரபுகளை நான் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நான் அவரை மனதாரக் காதலிக்கிறேன். எங்கள் பெற்றோரின் முழுச் சம்மதத்துடன் மகிழ்ச்சியுடன்  அவரை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். ” என்றார்.