உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் ‘தர்ம சன்சத்’ என்ற பெயரில் நடந்த இந்துமத மாநாட்டில் பேசிய பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த இந்து அமைப்புகளைச் சேர்ந்த மதவாதிகள் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய விவகாரம் தற்போது தெரியவந்திருக்கிறது.

யதி நர்சிங்ஆனந்த்

டிசம்பர் 17 முதல் 19 வரை மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டை உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த யதி நர்சிங்ஆனந்த் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இந்துமகாசபை பொதுச் செயலாளர் மாதா அன்னபூர்ணா “இந்து மதத்தைக் காக்க எதற்கும் துணிந்த 100 வீரர்கள் இருந்தால் போதும் மதத்தை எதிர்க்கும் 20 லட்சம் பேரைக் கூட எதிர்கொண்டு வெல்வோம்” என்று பேசினார்.

https://twitter.com/zoo_bear/status/1473581283242491904

இந்து தேசம் அமையாவிட்டால் 1857 ல் நடந்தது போல் கலகம் வெடிக்கும் என்று ஆனந்த் ஸ்வரூப் மகாராஜ் கூறினார். மேலும், இந்த ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் குறிப்பாக ஹரித்வாரில் உள்ள ஹோட்டல்கள் உள்ளிட்ட எந்த பொதுஇடத்திலும் யாரும் கிறிஸ்துமஸ் அல்லது ரம்ஜான் பண்டிகையை கொண்டாட அனுமதிக்க மாட்டோம் என்றும் கோரினார்.

மதத்தை காக்க ஆயுதம் ஏந்தவும் தயாராகவேண்டும் என்று யதி நர்சிங்ஆனந்த் பேசியதோடு இந்துமதத்தைக் காக்க விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் போன்று ஒருவர் இந்துமதத்திற்கு வேண்டும் என்று கூறியதோடு அப்படி ஒருவர் முன்வந்தால் அவருக்கு நான் ஒரு கோடி ரூபாய் பணம் வழங்குவதோடு தொடர்ந்து 100 கோடி ரூபாய் நிதியும் திரட்டித் தருவேன் என்று பேசி அதிரவைத்தார்.

இந்த கூட்டத்தில் பேசிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தர்மதாஸ் மகாராஜ், இஸ்லாமியர்களுக்கு ஆதரவான சட்டத்தை மன்மோகன் சிங் கொண்டுவந்த போது நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால், நாதுராம் கோட்ஸே செய்த வேலையை செய்திருப்பேன், ஆறு குண்டுகளையும் பிரயோகித்திருப்பேன் என்று பேசியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பா ஜ க தலைவர் அஸ்வினி உபாத்யாயா-விடம் கேட்கப்பட்டது, “மூன்று நாள் நடந்த மாநாட்டில் என்னையும் கலந்து கொண்ட அழைத்தார்கள், நான் 30 நிமிடம் அங்கு உரையாற்றினேன், எனக்கு முன்னரும் பின்னரும் யார் பேசினார்கள் என்பது குறித்து எனக்கு எந்தவிவரமும் தெரியாது” என்று கூறியுள்ளார்.

மதத்தின் பெயரால் சர்ச்சையை உருவாக்க மாநாடு நடந்திருப்பதும் வன்முறையை தூண்டும் விதமாக பேசியவர்கள் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதோடு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-கிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் கேள்வியெழுப்பப்பட்டு வருகிறது.