பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளம் மருத்துவர், கொரோனா படுக்கையில் உயிருக்கு போராடி வந்த இஸ்லாமிய முதிய பெண்மணிக்கு, காலிமா (kalima) எனப்படும் இஸ்லாமிய பிரார்த்தனையை செய்தார். அத்துடன் அந்த முதிய பெண்மணி விண்ணுலகம் சென்றார்.
டாக்டர் ரேகா கிருஷ்ணா, துபாயில் பிறந்த வளர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்த மருத்துவர். தற்போது பாலக்காடு மாவட்டத்தில் உள்ள செவனா (Sevena) மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி கழகத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது கொரோனா காலக்கட்டமாதலால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வருகிறார்.
அப்போது, கொரோனா தீவிரம் காரணமாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முதிய இஸ்லாமிய பெண்மனிணியின் நிலையைக் கண்டு கண்கலங்கிய டாக்டர் ரேகா, இஸ்லாமியர்கள் இறக்கும் தருவாயில் கூறப்படும் காலிமா என்ற பிரார்த்தனையை அவரது காதில் கூறினார். இதையடுத்து அந்த முதிய பெண்மணியுடன் திருப்தியுடன் இயற்கை எய்தினார்.
இந்து மருத்துவர் ஒருவர் இஸ்லாமிய பிரார்த்தனை செய்தது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து கூறிய மருத்துவர் ரேகா கிருஷ்ணா, தான் துபாயில் பிறந்து வளர்ந்தாலும், அங்குள்ள மதச்சடங்குகள் மற்றும் பிரார்தனைகள் தனக்கு தெரியும். மருத்துவம் செய்யும்போது நான் வேறுபாடு பார்ப்பதில்லை. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஏராளமானோர் தங்களது சொந்த பந்தங்களைக்கூட பார்க்க முடியாத நிலையில், உயிர் துறந்து வரும் சோகம் ஏற்பட்டு வருகிறது. அதுபோல ஒரு நிலையில் தான், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இஸ்லாமிய பெண்மணி, திருப்தியுடன் இயற்கை எய்தும் வகையில், அவருக்கு காலிமா ஓதினேன் என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவரின் மனிதாபிமான செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.