சென்னை

சென்னையை அடுத்த செம்பரம்ப்பாக்கம் பகுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து ஈவிபி ஃபிலிம் சிட்டி முன்பு ஒரு இந்து அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது.

கமலஹாசன் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்புக்கு மேல் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.   இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வோர் ஆண் – பெண் என வித்தியாசம் இல்லாமல் கட்டிப்பிடித்துக் கொள்வதாகவும் இது நமது கலாச்சாரத்துக்கு எதிரானது எனவும் பல புகார்கள் எழுந்துள்ளன.  இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சென்னையை அடுத்துள்ள செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிடியினுள் நடைபெறுகிறது,

இது போல நேதாஜி சுபாஷ் சேனை என்னும் ஒரு இந்து அமைப்பினரும் இதற்கு போர்க்கொடி தூக்கியுள்ளனர்.   இதன் தலைவர் மகாராஜன் தலைமையில் சுமார் 40 பேர் கூடி ஈவிபி ஃபிலிம் சிட்டி வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.  தற்போது அவர்கள் அனைவரும் ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இது குறித்து அந்த அமைப்பினர் கூறியதாவது, “இது நமது பண்பாட்டுக்கு ஒவ்வாத ஒரு நிகழ்ச்சி.  அதில் வரும் பெண்கள் அனைவரும் அரைகுறை ஆடையுடன் திரிகின்றனர்.  ஆண் பெண் என ஒரு வித்தியாசமும் இன்றி கட்டிப் பிடித்துக் கொள்கின்றனர்.   நாட்டில் தற்போது நடக்கும் எத்தனையோ பிரச்னைகளை திசை திருப்பவே இந்த நிகழ்ச்சி நடப்பதாக எங்களுக்கு சந்தேகம் உள்ளது.  இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த நிகழ்ச்சி தடை செய்யப்படவேண்டும்.  அப்படி இல்லையெனில் மேலும் போராட்டங்கள் நடத்தப்படும் என கூறினார்கள்.