இந்தி.. படம் சொல்லும் கதைதான்..
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்
“பணக்காரன் வூட்டு பசங்கள்லாம் இந்தி சொல்லித்தர்ற பள்ளிக்கூடத்துல படிக்கவெச்சிட்டு உங்கள மாதிரி ஏழை பாழையெல்லாம் இந்தி படிக்கக்கூடாதுன்னு தடுக்கறாங்க..”
இப்படியொரு பொங்கல் வாசகத்தை ஆங்காங்கே காணலாம்.
இந்தி கற்றதால் நான் அடைந்த லாபம்…
இந்தி தெரியாததால் ரொம்ப கஷ்டப்பட்டேன்..
இதுமாதிரியான நெஞ்சும் நக்கும் ரைட் அப்புகளையும் நிறைய காணலாம்..
இந்த உலகமகா லூசுகளின் ஒரே பம்பலக்கடி ஜிம்பா, நல்ல வேலை வாய்ப்பு.. மற்றபடி ஒரு பொடலங்காயும் இல்லை
இவர்கள் ஆசை காட்டுவது, வேலை என்ற அஸ்திரம், நாம் சிந்திப்பது இனம் மொழி, மண்ணின் கலாச்சார உயிர்ப்புத்தன்மை
பணக்கார வீட்டு பசங்க பள்ளிக்கூடத்தில் இந்தி இருக்கு. அங்கு இந்தி கற்றதனாலேயே வேலை பெற்று உயர்ந்தார்கள் என்பதெல்லாம் சுத்த ஹம்பக்.. இந்தியும் கற்றார்கள் அவ்வளவுதான்.
விரும்பிப்போய் இந்தி கற்கும் யாரையும் தடுத்த நிறுத்த யாருக்கும் உரிமை இல்லை. விருப்பம் உள்ளவர்கள் எங்கும்போய் படிக்கலாம்.
இங்கு பிரச்சினை என்ன? மும்மொழிக்கொள்கை என்ற அஸ்திரத்தின் மூலம் மத்திய அரசு, பல இனங்களுக்கு எதிராக போர் தொடுக்கிறது.
மற்ற மாநிலங்களை விடுங்கள். நம் மாநிலத்தை வைத்து பேசுவோம்.மத்திய அரசு நான் உங்களுக்கு இந்தி சொல்லித்தருகிறேன் என்று சொல்கிறது. நீங்களும் கற்கிறீர்கள்..
ஒரு கட்டத்தில் உங்களுக்குத்தான் இந்தி தெரியுமே என்று, இந்தியிலேயே தொடர்பு கொள்ளுங்கள் என ஆரம்பிப்பார்கள். அப்புறம் எதற்கு பல மொழிகளில் தேர்வு என்றும் நாடு முழுக்க ஒரே மொழி என்று சொல்லி தேர்வையே முழுக்க முழுக்க இந்தியில் நடத்துவார்கள்.
மத்திய அரசிற்கும் மாநில மக்களுக்குமான தொடர்பில் முதலில் இங்லீஷ் காலியாகும். அடுத்து நம் தாய் மொழி காலியாகும்.. இதெல்லாம் சாத்தியமா? ஏன் சாத்தியமாகாது? இப்போது மத்திய அரசின் தமிழ்நாட்டு அலுவலகங் களில் இந்தி வாலாக்களின் ஆதிக்கம்தான்.
ரயில்வே நிலையங்கள், ஸ்டேட் பேங்க் போன்ற இடங்களில் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோம் என்று என்றைக்காவது உணர்ந்திருக்கிறீர்களா? நமது பேருந்து நிலையங்களில் ஏற்படும் உணர்வுக்கும் ரயில் நிலையங்களில் ஏற்படும் உணர்வுக்கும் வித்தியாசம் உணர்ந்ததில்லையா?
தமிழ்நாட்டுக்குள், திருச்சிக்கும் நெல்லைக்கும் இடையே ஓடும் சதாப்தி ரயிலில் பெரும்பாலும் தமிழர்கள்தான். ஆனால் தமிழ் மொழி எங்காவது பெரியதாக தென்படுகிறதா? சேலம்- விருத்தாசலம் பயணிகள் ரயிலுக்கான பயணச்சீட்டில்கூட ஒரு கட்டத்தில் தமிழ் காணாமல் போயிருந்தது.
ஒரு பக்கம் வடமாநிலத்தவர் தொழிலாளர்களாக லட்சக்கணக்கில் குடியேறி பல உரிமைகளை பெற்று நிரந்தமாக இங்கு இருக்கின்றனர். இந்த சூழல் அதிகமாக அதிமாக இந்தி என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிடும் பாமர இந்திக்காரனுக்காக பேருந்துகளில் இந்தி சேர்ப்பது தவறா என்று கேட்பார்கள்,
வடமாநிலத்தவர் வசதிக்காக என தொழில் மற்றும் வியாபாரங்கள்ல் இந்தி பரவலாக குடியேறும்.. தேவை என்ற பட்சத்தில் சம்மந்தப்ப்டட தமிழன் இந்தி பேச பழகிக்கொள்ளப்போகிறான்.
ஆனால் மத்திய அரசாங்கம் நமக்கு கற்றுக்கொடுத்து விட்டு, நீயும் இந்திக்காரனாகவே மாறவேண்டும் என்று சொல்லும் அபாயம் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர்ந்தால், வேலைவாய்ப்பு என்கிற மாய்மாலை வேலையெல்லாம் ஜுஜுபியாக தெரியும்.
இந்தியால் தமிழ்மொழி அழிந்துவிடுமா? இப்போதைக்கு அழியாது, ஆனால் காலப்போக்கில் அந்த கதி ஏற்பட்டுத்தீரும். வடமாநிலங்களில் இந்தியால் அழிந்துபோன தொன்மையான மொழிகள் ஏராளம்.
இன்றைக்கு பேச்சு வழக்கில் பல மொழிகளுக்கு எழுத்துவடிவம் காணாமல் போய்விட்டது. தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் பெயர் தெலுங்கில் எப்படி இருக்கும் என்பதுகூட தெரியாது.
இந்தித்திணிப்பு என்பது பெரும் பயங்கரத்தை முதுகுப் பின்னால் வைத்துக்கொண்டு, அரைவேக்காடுகளை விட்டு வேலை வாய்ப்பு என சிரித்த முகத்துடன் கூவிக்கொண்டிருக்கும்.
அந்த அரைவேக்காடுகளை தூக்கி சுயபுத்தி என்ற குக்கரில் போட்டு நாலு விசில் வைத்தால் வெந்துபோய்விடும்…