சென்னை

சொமேட்டோ நிர்வாகம் தனது வாடிக்கையாளரிடம் இந்தி தெரிந்தவர் மட்டுமே இந்தியர் என்னும் தொனியில் பேசி உள்ளது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இதற்கு திமுக எம்.பி. செந்தில்குமார் உள்பட நேட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அகில இந்திய அளவில்  உணவு விநியோக சேவை நிறுவனங்களில்  முன்னணியில் உள்ள நிறுவனங்களில் சொமேட்டோ நிறுவனமும் ஒன்றாகும்.   இந்த நிர்வாகம் சர்ச்சைகளில் சிக்குவதிலும் முன்னணியில் இருந்து வருகிறது.  சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ஒரு விநியோக ஊழியர் வாடிக்கையாளரின் உணவைத் தான் சாப்பிட்ட வீடியோ வைரலாகியது.

இதைப் போல் பெங்களூரில் உள்ள ஒரு பெண் வாடிக்கையாளரை சொமேட்டோ ஊழியர் தாக்கியதாகப் புகார் எழுந்து அவர் கைது செய்யப்பட்டார்.  பிறகு விசாரணையில் அந்த பெண் முதலில் சொமேட்டோ  ஊழியரைக் கேவலமாக நடத்தியது தெரிய வந்தது.   தற்போது மீண்டும் சொமேட்டோ நிறுவனம் மற்றொரு சர்ச்சையில் சிக்கி உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவர் சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார்.  அவர்கள் விநியோகம் செய்தது குறைவாக இருந்துள்ளது.  எனவே அவர் வாடிக்கையாளர் சேவை பிரிவைத் தொடர்பு கொண்டுள்ளார்.  அவர்கள் அவரிடம் இந்தியில் கேள்விகள் கேட்டுள்ளனர்.  இவருக்கு இந்தி தெரியவில்லை.

இதையொட்டி வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் அவருக்குப் பணம் திரும்ப கிடைக்காது எனவும் ஒரு இந்தியராக இருந்து அவரால் எப்படி இந்தியில் பேச முடியாமல் உள்ளது எனக் கேள்வி கேட்டுள்ளனர்.  மேலும் அவர் ஒரு தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இந்தியராக உள்ளார் எனவும் வினா எழுப்பி உள்ளனர்.

இதை விகாஷ் தனது டிவிட்டரில் பதிந்து வாடிக்கையாளர் சேவை பிரிவு ஸ்க்ரீன் ஷாட்டையும் பதிவிட்டுள்ளார்.

தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார்  தனது டிவிட்டரில், “இந்தி எப்போது இந்தியாவின் தேசிய மொழி ஆனது? தமிழகத்தில் உள்ளோர் ஏன் இந்தியை கற்றுக் கொள்ளவேண்டும்.   நீங்கள் அறிவுரைக்குப் பதில் வாடிக்கையாளரின் பிரச்சினையை தீர்த்து வையுங்கள்” என பதிந்துள்ளார்.

சொமேட்டோ நிறுவனத்தின் இந்தி சர்ச்சைக்கு சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருவதுடன், சொமட்டோவை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.